| ADDED : மே 10, 2024 05:24 AM
ஹாசன் : பேராசிரியை தற்கொலை மற்றும் பள்ளி ஆசிரியை மர்ம மரணம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.ஹாசன் சென்னராய பட்டணாவின், காயத்ரி லே - அவுட்டில் வசிக்கும் சோமசேகர், பாக்யா தம்பதி மகள் தீபா, 34. திருமணம் ஆகாத இவர், சென்னராய பட்டணாவில் அரசு பி.யு., கல்லுாரியில், கவுரவ பேராசிரியையாக பணியாற்றி வந்தார். தீபா நேற்று மதியம், தன் அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் என்பது தெரியவில்லை. சென்னராய பட்டணா போலீசார் விசாரிக்கின்றனர்.* துமகூரை சேர்ந்தவர் கீதாஸ்ரீ, 30. இவருக்கும், சித்ரதுர்கா, ஹொசதுர்காவின் கொரவனகல்லு கிராமத்தில் வசிக்கும் பிரபாகர், 35, என்பவருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார்.பிரபாகர் தனியார் வங்கியில் பணியாற்றுகிறார். கீதாஸ்ரீ தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். சமீப நாட்களாக பிரபாகர், பணத்துக்காக மனைவியை துன்புறுத்த துவங்கினார். கணவரின் தொந்தரவு தாங்காமல், மனம் நொந்த கீதாஸ்ரீ, தன் தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். சில நாட்களுக்கு முன், கணவர் வீட்டுக்கு திரும்பினார்.இந்நிலையில் கீதாஸ்ரீ, நேற்று காலை துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். இவர் தற்கொலை செய்து கொண்டதாக, கணவர் வீட்டினர் கூறுகின்றனர். ஆனால் இவரை கணவர் வீட்டினர் அடித்து கொலை செய்து, துாக்கில் தொங்க விட்டுள்ளதாக கீதாஸ்ரீயின் பெற்றோர் புகார் அளித்தனர். புகார் பதிவானதும், பிரபாகர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடுகின்றனர்.ஹொசதுர்கா போலீசார் விசாரிக்கின்றனர்.