| ADDED : மே 04, 2024 11:02 PM
கலபுரகி: ''கலபுரகியில் மே 7ல் ஓட்டுப்பதிவின்போது, வாக்காளர்களுக்கு குடிநீர், நிழல் வசதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மொத்தம் 40 ஆம்புலன்ஸ்கள், மருத்துவ பணியாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது,'' என, மாவட்ட தேர்தல் அதிகாரி பவுசியா தரணும் தெரிவித்தார்.கலபுரகியில் அவர் கூறியதாவது:கலபுரகியில் மே 7ல் ஓட்டுப்பதிவின்போது, வாக்காளர்களுக்கு குடிநீர், நிழல் வசதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வெப்பத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க, மொத்தம் 40 ஆம்புலன்ஸ்கள், மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.ஒவ்வொரு தாலுகா மருத்துவமனைகளிலும் 6 முதல் 7 படுக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஓட்டுப்பதிவுக்கான பெரும்பாலான ஏற்பாடுகள் முடிந்துவிட்டன.இத்தொகுதியில் மொத்தம் 2,166 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அவற்றில் 545 ஓட்டுச்சாவடிகள் அதிக பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. அசம்பாவிதம் நடக்காத வகையில், மத்திய தொழில் ரிசர்வ் போலீஸ் படை, மாநில போலீஸ் ரிசர்வ் படை, போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை 1,103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஓட்டுச்சாவடிக்குள் மொபைல் போன் கொண்டு செல்லக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.