பெங்களூரு, - வேலைக்கார பெண் கடத்தல் வழக்கில் கைதான எம்.எல்.ஏ., ரேவண்ணாவின் ஜாமின் மனு மீதான விசாரணை, வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.ஹாசன் ஹொளேநரசிபுரா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா, 66. முன்னாள் வேலைக்கார பெண்ணை கடத்திய வழக்கில், கடந்த 4 ம் தேதி கைது செய்யப்பட்டார். முன்ஜாமின் கேட்டு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், ரேவண்ணா தரப்பில் மனு செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை நடந்து வருகிறது.இதற்கிடையில் ரேவண்ணாவை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரித்தது. நேற்று முன் தினத்துடன் காவல் முடிந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஏழு நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். ரகசிய வாக்குமூலம்
இந்நிலையில், ஜாமின் மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. ரேவண்ணா தரப்பில் ஆஜரான வக்கீல் நாகேஷ் வாதாடுகையில், ''எனது மனுதாரரால் கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணை மீட்டு ஐந்து நாட்கள் ஆகிறது. இதுவரை அவரிடம் விசாரணை நடத்தவில்லை. நீதிபதி முன்பு அந்த பெண், ரகசிய வாக்குமூலமும் அளிக்கவில்லை. இரண்டு வாகனங்களில் பெண்ணை கடத்தி சென்றதாக, விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர். ''ஒரு பெண்ணை இரண்டு வாகனங்களில், எப்படி கடத்தி செல்ல முடியும். அநியாயம் செய்வதற்கும் ஒரு எல்லை உண்டு. மனுதாரருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும்,'' என்றார். மரண தண்டனை
சிறப்பு புலனாய்வு குழு வக்கீல்கள் வாதாடுகையில், 'மனுதாரரின் மகன் மீது, பலாத்கார வழக்கு பதிவாகி உள்ளது. தன் மகன் மீது புகார் அளிப்பார் என்ற பயத்தில், மனுதாரர் பெண்ணை கடத்தி உள்ளார். கடத்தப்பட்ட பெண்ணின் மகன் அளித்த புகாரில், எனது தாயின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று கூறி உள்ளார்.'மனுதாரர் மீது இந்திய தண்டனை சட்டம் 364ஏ ன் கீழ், வழக்கு பதிவாகி உள்ளது. மனுதாரருக்கு ஜாமின் கொடுத்தால், சாட்சியங்களை அழிக்கும் வாய்ப்பு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டி, புகார் அளிக்க விடாமல் செய்யலாம். இதனால் அவருக்கு ஜாமின் கொடுக்க கூடாது' என்றனர்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சந்தோஷ் பட், மனு மீதான விசாரணையை 13 ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அடுத்த விசாரணைக்கு இன்னும் மூன்று நாட்கள் உள்ளதால், ரேவண்ணா சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.