| ADDED : மே 01, 2024 01:38 AM
புதுடில்லி:சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா முடிவு செய்துள்ளார்.டில்லி அரசின் 2021 - 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.துணைநிலை கவர்னர் சக்சேனா உத்தரவுப்படி சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.டில்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பிப். 28ல் அவர் தன் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரத்தில் நடந்த சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் குறித்து வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை கடந்த ஆண்டு மார்ச் 9ல் சிசோடியாவை கைது செய்தது.ஓராண்டுக்கும் மேல் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிசோடியா, ரோஸ் அவென்யூ வளாகத்தில் உள்ள் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா முன் அந்த மனு விசாரணைக்கு வந்தது.சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், விசாரணை முக்கியக் கட்டத்தில் இருப்பதால் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி காவேரி பவேஜா, ஜாமின் வழங்க இது உகந்த நேரம் அல்ல எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.இதையடுத்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மணீஷ் சிசோடியா முடிவு செய்து உள்ளார்.