பெங்களூரு, - கர்நாடகாவில் ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்புகள் நடத்த, பள்ளி கல்வி துறை திட்டமிட்டு உள்ளது.கர்நாடகா கல்வி துறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவங்க உத்தரவிடப்பட்டது. இதற்கு அங்கன்வாடி ஆசிரியர்கள், உதவியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர். உத்தரவை வாபஸ் பெற கோரி, 'கல்யாண் கர்நாடகா' மாவட்டங்களை சேர்ந்த அங்கன்வாடி ஆசிரியர்கள், உதவியாளர்கள் ஜூன் 3ம் தேதி 'கலபுரகி போராட்டம்' நடத்த உள்ளனர். பயம் போகும்
இந்நிலையில், பள்ளி கல்வி துறை மேலும் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:நடப்பாண்டு முதல், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 10 ம் வகுப்பு வரை, 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்புகள் நடத்த வேண்டும்.வாரந்தோறும் சனிக்கிழமைகளில், 40 நிமிடங்கள் 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' வகுப்பு நடத்தப்படும். அன்றைய தினம் மாணவர்கள் அனைவரும் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும். இதனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் பயம் போகும். பி.யு.சி., முடித்தவுடன், போட்டி தேர்வை கண்டு அஞ்ச தேவையில்லை.இந்த வகுப்புகள் நடத்துவதால், ஆங்கிலம் தெரியாமல் தவிக்கும் கன்னட பள்ளி மாணவர்கள், அவர்களின் வாழ்க்கைக்கு தைரியத்தை ஏற்படுத்தும். இந்த வகுப்பில், நாடகம், பேச்சுத்திறன், கதை சொல்லுதல், சூழ்நிலை விளக்கம், தங்களின் அனுபவங்கள் பகிர்வு நடத்தப்படும். சவாலான பணி
கிராமப்புற மாணவர்களிடையே ஆங்கிலம் கற்பது சவாலான பணியாக உள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., - பி.யு.சி., முடித்த பின், ஜே.இ.இ., - நீட், பொது நுழைவு தேர்வு என போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகளை எதிர்கொள்ளவும், மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்முறை படிப்புகளில் சேரவும் ஆங்கிலம் அவசியம்.இதை கருத்தில் கொண்டு, பள்ளிக்கல்வி துறை, இம்முடிவை எடுத்துள்ளது. அத்துடன், பள்ளி அளவில் ஆங்கில பயிற்சி அளிப்பதால், மாணவர்களின் எதிர்கால கல்விக்கும், போட்டி தேர்வுக்கும் உதவியாக இருக்கும்.பட்டதாரி ஆசிரியர்கள், ஆங்கில ஆசிரியர்கள் கொண்ட குழுவினரால், 'ஸ்போக்கன் இங்கீலிஷ்' கையேடு தயாரிக்கப்பட்டு உள்ளது. இது மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச உதவும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.