சிக்கபல்லாப்பூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகாவில் உள்ளது முருகமலை கிராமம். இந்த கிராமத்தில் முக்தீஸ்வரா கோவில் உள்ளது. இங்கு மூலவராக சிவபெருமான், பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இங்கு பரத்வாஜ் மஹரிஷி என்ற முனிவர், ஆழ்ந்த தவம் செய்ததால், 'பரத்வாஜ் சேத்ரா' என்றும் அழைக்கப்படுகிறது.கோவிலுக்குள் ஒரு குகை உள்ளது. இந்த குகை பல முனிவர்கள், முக்தி அடைந்த இடம் என்றும் சொல்லப்படுகிறது. இந்த இடத்தின் மகிமை பற்றி அறிந்த முனிவர் பரத்வாஜ் மஹரிஷி தனது பெற்றோருடன் இங்கு குடியேறி உள்ளார் என்றும் பழங்கால வரலாறுகள் கூறுகின்றன.பில்லி, சூனியத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இக்கோவிலுக்கு வந்து, பூஜை செய்வதன் மூலம் பில்லி, சூனியத்தில் இருந்து விடுபடலாம் என்பதும் ஐதீகம். கருப்பு வளையலை கொண்டு வந்து, முக்தீஸ்வரர் முன்பு வைத்து வழிபட்டால், பிரச்னைகள் நீங்கும் என்றும், பக்தர்கள் நம்புகின்றனர். கோவிலில் உள்ள ஊற்று தண்ணீரை குடித்தால், நோய்கள் நீங்குவதுடன், பெண்களின் மாதவிடாய் பிரச்னையும் கூட சரியாகும் என்று, பக்தர்கள் கூறுகின்றனர்.முக்தீஸ்வரா கோவில் அருகே அப்பஜன், அம்மஜன் என்ற இரு தர்காக்கள் உள்ளன. இங்கு வருவோர், முக்தீஸ்வரா கோவிலுக்கு செல்லாமல் வீடு திரும்புவது இல்லை. தர்காவில் நடக்கும் சந்தனக்கூடு திருவிழாவிற்கு, சந்தன கட்டைகள் தயாரிக்க கோவிலின் ஊற்று தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. சில முஸ்லிம் பக்தர்கள் கனவில் தோன்றும் சிவபெருமான், கோவிலுக்கு வரும்படி அழைப்பு விடுக்கிறார். உடனடியாக முஸ்லிம்கள் கோவிலுக்கு வந்து, சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.பக்தர்கள் தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற சிவப்பு துணியில் ஒரு ரூபாய் அல்லது 11 ரூபாய் நாணயம் வைத்து, கோவில் மரத்தில் கட்டி சென்றால், நினைத்தது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.பெங்களூரில் இருந்து 82 கிலோ மீட்டர் துாரத்தில், கோவில் அமைந்து உள்ளது. பெங்களூரில் இருந்து பஸ்சில் செல்வோர், சிந்தாமணி சென்று அங்கிருந்து, முருகமலை கிராமத்திற்கு செல்ல வேண்டும். காரிலும் செல்லலாம்.- நமது நிருபர் -