புதுடில்லி :முதல்வரின் பரிந்துரையை ஏற்று, பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து, இன்றைக்குள் உரிய முடிவு எடுக்குமாறு, கவர்னர் ரவிக்கு சுப்ரீம் கோர்ட் கெடு விதித்துள்ளது.தி.மு.க., அரசில் பொன்முடி உயர் கல்வி அமைச்சராக இருநதார். முந்தைய தி.மு.க., ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு மீறி அவர் சொத்து சேர்த்தார் என, அ.தி.மு.க., ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதாக டிசம்பர் மாதம் ஐகோர்ட் அறிவித்தது. உத்தரவு
மூன்றாண்டு சிறை தண்டனை, 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பால், எம்.எல்.ஏ., பதவியில் நீடிக்கும் தகுதியை அவர் இழந்தார். அதனால், அமைச்சர் பதவியிலும் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அமைச்சர் பதவியை அவராக ராஜினாமா செய்தார். அவரது திருக்கோவிலுார் தொகுதி எம்.எல்.ஏ., பதவி காலியானதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இதற்கிடையில், ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொன்முடி அப்பீல் செய்தார். பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பையும், அதன் அடிப்படையில் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும் நிறுத்தி வைப்பதாக சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவால், பொன்முடிக்கு எதிரான தகுதியிழப்பு நடவடிக்கையை சபாநாயகர் விலக்கிக் கொண்டார். அதனால், பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ.,வானார். அவரை மீண்டும் அமைச்சராக்க, முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்தார். பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு கவர்னர் ரவிக்கு கடிதம் அனுப்பினார்.முதல்வரின் பரிந்துரையை கவர்னர் ஏற்கவில்லை. 'தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர, பொன்முடி நிரபராதி என்று கோர்ட் கூறவில்லை. எனவே, அவரை அமைச்சராக்குவது சரியாக இருக்காது' என, முதல்வருக்கு கவர்னர் ரவி பதில் அனுப்பினார்.அதிகாரம் கிடையாது
இதை எதிர்த்து, தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. நேற்று அந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில், மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். ''முதல்வரின் பரிந்துரையை ஏற்க வேண்டியது கவர்னரின் கடமை. முடியாது என மறுக்க அவருக்கு அதிகாரம் கிடையாது. கவர்னர் ரவி ஆரம்பம் முதலே, தமிழக அரசின் அரசியல் விரோதி போல செயல்படுகிறார். ''அரசின் கொள்கைகள், சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பு செய்து வந்தார். அதை இந்த கோர்ட் தலையிட்டு திருத்த நேர்ந்தது. இப்போது, ஒரு அமைச்சருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க முதல்வர் பரிந்துரை செய்ததை ஏற்க மறுக்கிறார். 75 ஆண்டுகளில், எந்த கவர்னரும் இப்படி செய்தது இல்லை,''என, சிங்வி வாதிட்டார். மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணி, ''இந்த மனுவில் டெக்னிக்கலாக சில பிரச்னைகள் உள்ளன,” என்றார். தமிழக அரசின் முந்தைய மனு ஒன்றின் தொடர்ச்சியாக இந்த வழக்கை தாக்கல் செய்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். நீதிபதிகள் அதை ஏற்கவில்லை. ''மிஸ்டர் அட்டர்னி ஜெனரல், உங்க கவர்னர் என்ன செய்கிறார்? தண்டனையை நிறுத்தி வைத்து இந்த கோர்ட் உத்தரவிட்ட பின், பதவிப் பிரமாணம் செய்ய முடியாது என்று எப்படி அவர் மறுக்க முடியும்,'' என்று தலைமை நீதிபதி கேட்டார்.அட்டர்னி ஜெனரல் விடாப்பிடியாக, “அமைச்சராக பதவி பிரமாணம் செய்ய கவர்னர் மறுப்பது பொன்முடியின் அடிப்படை உரிமையை பாதிக்கும் என்று, தமிழக அரசு எப்படி சொல்ல முடியும்,” என்றார்.தலைமை நீதிபதி, “இல்லை, அட்டர்னி ஜெனரல். இந்த விஷயத்தை நாங்கள் ரொம்ப சீரியசாக எடுத்துக் கொண்டுள்ளோம் என, உங்கள் கவர்னரிடம் கூறுங்கள். இந்த கோர்ட்டின் இரண்டு நீதிபதிகள் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதன் பிறகும், கவர்னர் அதற்கு மாறான ஒரு கருத்தை தெரிவிக்கிறார். அரசியல் சட்டம் என்ன சொல்கிறது, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டுக்கு சொல்லிக் கொடுக்கிறாரா?” என்று கேட்டார்.நீதிபதி மனோஜ் மிஸ்ரா குறுக்கிட்டு, ''தண்டனையும் தீர்ப்பும் நிறுத்தி வைக்கப்பட்டால், தீர்ப்புக்கு முந்தைய நிலைக்கு வந்ததாகத் தானே அர்த்தம். அப்படி என்றால் பொன்முடிக்கு மறுபடியும் பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை தானே,'' என்று கேட்டார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான மற்றொரு சீனியர் வக்கீல் வில்சன், “அவசியம் இல்லை என்று தான் தோன்றுகிறது,” என்றார். தலைமை நீதிபதி மீண்டும் அட்வகேட் ஜெனரலை பார்த்து, “அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக ஒரு கவர்னர் செயல்பட்டால் அரசாங்கம் என்ன செய்யும்? அதை சொல்லுங்கள்,” என்றார்.அட்டர்னி ஜெனரல் பொன்முடி குறித்து ஏதோ சொல்வதற்குள் தலைமை நீதிபதி, ''நாங்கள் வாய்விட்டு சொல்ல வேண்டாம் என்று இருந்தோம். ஆனால், நீங்கள் எங்களை ஓப்பனாக சொல்ல வைக்கிறீர்கள். கவர்னர் நடந்து கொண்டது முற்றிலும் சரியில்லை. அரசியல் சட்டம் பற்றி, எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை. இந்தியாவின் சுப்ரீம் கோர்ட் ஒரு உத்தரவை பிறப்பிக்கிறது என்றால், சட்டம் அந்த வழியில் தான் செல்ல முடியும். யாரும் அதில் குறுக்கிட்டு புதிதாக விளக்கம் சொல்ல வழி கிடையாது. அப்படி செய்வதன் வாயிலாக, கவர்னர் இந்த கோர்ட்டையே அவமதிக்கிறார் என்று தான் நாங்கள் பார்க்கிறோம்,” என்று கடுமையாக கூறினார்.பொன்முடி நிரபராதி அல்ல என்று கவர்னர் குறிப்பிட்டதற்கு விளக்கம் அளிப்பது போல, அட்டர்னி ஜெனரல் பேச தொடங்கியதும், தலைமை நீதிபதி மீண்டும் குறுக்கிட்டார். ''அந்த ஆள், அந்த மினிஸ்டர் எப்படிப்பட்டவர் என்பதை பற்றி, உங்களுக்கு ஒரு கருத்து இருக்கலாம். எனக்கு ஒரு கருத்து இருக்கலாம். இந்த வழக்கில் பிரச்னை எவருடைய தனிப்பட்ட கண்ணோட்டம் அல்லது மதிப்பீடு பற்றியது இல்லை. அரசியல் சாசனம்; அது என்ன சொல்கிறது? அதை மட்டும் தான் பார்க்க வேண்டும். ஒரு மாநிலத்தின் முதல்வர் ஒரு ஆளை அமைச்சராக்க தீர்மானிக்கிறார். அது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் உள்ள நடைமுறை. தன் முடிவை கவர்னருக்கு பரிந்துரைக்கிறார். கவர்னர் யார்? மாநிலத்தின் தலைவர். அது, ஒரு அடையாள பதவி. தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுக்கு, அவர் ஆலோசனை கூறலாம். அவ்வளவு தான்” என்றார். “நாளை வரை அவகாசம் கொடுங்கள்; முடிவு சொல்கிறோம்,” என்று அட்டர்னி ஜெனரல் கேட்டார்.நீதிபதிகள் கலந்து பேசி அதற்கு சம்மதித்தனர். “நாளைக்குள் கவர்னர் முடிவெடுத்து செயல்பட வேண்டும். இல்லை என்றால், நாங்களே அதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டியிருக்கும். அரசியலமைப்பு சட்டத்தின்படி முறையாக நடந்து கொள்ளுமாறு கவர்னருக்கு நாங்கள் உத்தரவிட வேண்டிய நிலை உருவாவதை நாங்கள் விரும்பவில்லை,” என்ற எச்சரிக்கையுடன் விசாரனையை முடித்து வைத்தார் தலைமை நீதிபதி சந்திரசூட்.