| ADDED : ஜூலை 22, 2024 01:10 AM
திருவனந்தபுரம் : கேரளாவில், டாக்டர் போட்ட தவறான ஊசியால் ஐந்து நாட்களாக சுயநினைவின்றி இருந்த இளம்பெண் நேற்று உயிரிழந்தார்.கேரளாவின் திருவனந்தபுரத்தை அடுத்த மலையின்கீழு பகுதியைச் சேர்ந்த பெண் கிருஷ்ணா, 28. இவருக்கு சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது தெரியவந்ததை அடுத்து, இது தொடர்பான சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம், அங்கு பணியில் இருந்த டாக்டர் வினு, கிருஷ்ணாவுக்கு ஊசி வாயிலாக மருந்து செலுத்தியுள்ளார்.குற்றச்சாட்டுஅடுத்த சில நிமிடங்களிலேயே கிருஷ்ணா சுயநினைவின்றி மயங்கி விழுந்தார். அவரது நிலைமை மோசமானதை அடுத்து, அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், ஐந்து நாட்களாக சுயநினைவின்றி இருந்த கிருஷ்ணா, நேற்று காலை உயிரிழந்தார். டாக்டர் வினு செலுத்திய தவறான மருந்து மற்றும் ஊசியாலேயே தன் மகள் உயிரிழந்ததாக இளம் பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து கிருஷ்ணாவின் கணவர் ஷரத் அளித்த புகாரின் அடிப்படையில், டாக்டர் வினு மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.அதில், 'ஏற்கனவே ஒவ்வாமை பிரச்னைகள் இருந்த பெண்ணுக்கு, அது தொடர்பான பரிசோதனை எதுவும் மேற்கொள்ளாமல் தவறாக ஊசி செலுத்தப்பட்டதில் அவர் உயிரிழந்தார்' என, கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, இந்த குற்றச்சாட்டை கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் மறுத்துள்ளது. கோரிக்கைஇதுகுறித்த அறிக்கையில், 'வயிறு தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு செலுத்தப்படும் வழக்கமான ஊசி தான் இளம் பெண்ணுக்கு செலுத்தப்பட்டது.'இதனால், ஏற்பட்ட 'அனாபிலாக்சிஸ்' என்ற கடுமையான ஒவ்வாமை எதிர்வினை காரணமாக அவர் இறந்திருக்கலாம். இதற்கு டாக்டரின் அலட்சியமே காரணம் என்பதை ஏற்க முடியாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம்பெண் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள திருவனந்தபுரம் காங்., - எம்.பி., சசி தரூர், 'இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்' என, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.