உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் வந்தவுடன் நினைவுக்கு வரும் பாலம் ஆறு ஆண்டுகளாக பணிகள் இழுத்தடிப்பு

தேர்தல் வந்தவுடன் நினைவுக்கு வரும் பாலம் ஆறு ஆண்டுகளாக பணிகள் இழுத்தடிப்பு

சட்டசபை, லோக்சபா தேர்தல்களுக்கு பின்னும், உளகா - கெரவடி பாலம் கட்டும் பணிகள் முடியாமல் இருப்பது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.உத்தரகன்னடா, கார்வாரில் உளகா - கெரவடி அடையே, பாலம் கட்ட வேண்டும் என்பது, மக்களின் நீண்ட நாள் வேண்டுகோளாகும். 2018ல் முதல்வராக இருந்த சித்தராமையா, பாலம் கட்ட அனுமதி அளித்தார். பணிகளுக்கு 25 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, பணிகள் முடிந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை முடியவில்லை.காளி ஆற்றுக்கு குறுக்கே கட்டப்படும் பாலம், உளகா மற்றும் கெரவடி கிராமங்களை இணைக்கிறது. இரண்டு பக்கமும் உள்ள பெரும்பாலான கிராமங்களின் மக்கள் கார்வார் நகர், மல்லாபுராவுக்கு விரைவில் செல்ல உதவியாக இருக்கும். இந்த பாலம் கட்டப்படும் என்று 15 ஆண்டுகளாகவே தேர்தல் வாக்குறுதியாக உள்ளது.சட்டசபை, லோக்சபா தேர்தலின்போது, பிரசாரத்துக்கு வரும் வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள், பாலம் கட்டுவதாக வாக்குறுதி அளிக்கின்றனர். அதன் பின் மறந்துவிடுகின்றனர். தேர்தல் நெருக்கத்தில் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது; ஆனால் எதுவும் நடக்கவில்லை.பாலம் பணிகளை துவக்கி, ஆறு ஆண்டுகள் கடந்தன. இந்த கால கட்டத்தில் மூன்று அரசுகள் மாறின. பணிகள் முடியவில்லை. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, உத்தரகன்னடா மாவட்டத்தின், பல இடங்களில் துவக்கப்பட்ட பாலம் கட்டும் பணிகள் முடிந்துவிட்டன; மக்களின் பயன்பாட்டுக்கும் திறந்துவிடப்பட்டன. ஆனால் உளகா - கெரவாடி பாலம் கட்டும் பணிகள் மந்தமாக நடக்கின்றன.இம்முறை லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு வந்த அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் இந்த பாலத்தை கட்டி முடிப்பதாக, வாக்குறுதி அளிக்கின்றனர். இதனால் மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். தேர்தல் வந்தால் மட்டும் பாலம் நினைவுக்கு வருகிறதா என, கேள்வி எழுப்புகின்றனர்.கர்நாடக சாலை வளர்ச்சி கார்ப்பரேஷன் அதிகாரி கூறியதாவது:உளகா - கெரவடி பாலம் கட்டும் திட்டத்துக்கு, 25 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. பணிகளின் பொறுப்பை ஏற்றிருந்த நிறுவனம், பல மாதங்களுக்கு முன்பே பணிகளை நிறுத்திவிட்டது. முந்தைய திட்ட அறிக்கையின்படி, பணிகளை தொடர, இந்த நிதி போதாது. கூடுதல் நிதி வேண்டும் என, அந்த நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.பாலத்தை கட்டி முடிக்க, கூடுதல் நிதி வழங்கும்படி மாநில அரசிடம் கோரிக்கை அனுப்பி உள்ளோம். நிதி கிடைத்த பின், விரைவில் பணிகளை துவக்குவோம்.இவ்வாறு அவர் கூறினார்- நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ