பக்கத்து வீட்டு பெண்ணை கொலை செய்தவர் கைது
புதுடில்லி:கிழக்கு டில்லி திரிலோக்புரியில் பெண்ணைக் கத்தியால் குத்திக் கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்..திரிலோக்புரியில் வசித்தவர் ரேகா,40. வீட்டு வேலை செய்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சுரேஷ் குமார், 40. டிரைவர். நேற்று காலை ரேகா வீட்டுக்குள் வந்த சுரேஷ் குமார்,48, கத்தியால் ரேகாவை சரமாரியாகக் குத்தி விட்டு தப்பி ஓடினார்.ரத்த வெள்ளத்தில் சரிந்த மனைவியை அவரது கணவர், எல்.பி.எஸ்., மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். பரிசோதனை செய்த டாக்டர்கள், ரேகா ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்தனர். மேலும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர். மேலும், கொலை நடந்த இடத்திலும் ஆய்வு செய்தனர்.அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். ரேகா வீட்டுக்குள் சுரேஷ் குமார் செல்வதும் சற்று நேரத்தில் வெளியே ஓடி வருவதும் பதிவாகி இருந்தது. சுரேஷ் குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.