| ADDED : மே 06, 2024 05:13 AM
சாம்ராஜ் நகர் : ஓட்டுச்சாவடியை துவம்சம் செய்துவிட்டு, கைது பயத்தால் காட்டுக்கு சென்று பதுங்கியிருந்த கிராமத்தினரை, மாவட்ட நிர்வாகம் உத்தரவின்படி போலீசார் கண்டுபிடித்து அழைத்து வந்தனர்.சாம்ராஜ் நகர் லோக்சபா தொகுதிக்கு, ஏப்ரல் 26ல் ஓட்டு பதிவு நடந்தது. ஹனுாரின், இன்டிகநத்தா கிராமத்தினர், தங்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவில்லை என்பதால், தேர்தலை புறக்கணித்தனர். ஓட்டு பதிவு நாளன்று ஓட்டுச்சாவடிக்கு செல்லவில்லை. தேர்தல் அதிகாரிகள் கிராமத்துக்கு வந்து, ஓட்டு போடும்படி அறிவுரை கூறினர்.இதை பொருட்படுத்தாத கிராமத்தினர், ஓட்டுச்சாவடியில் நுழைந்து அடித்து நொறுக்கினர். மேஜைகள், இருக்கைகள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை உடைத்தனர். தேர்தல் அதிகாரிகள், போலீசார் மீது கற்களை வீசினர். கலவரத்தை ஏற்படுத்திய 33 பேரை, போலீசார் கைது செய்தனர். 250க்கும் மேற்பட்டோர் மீது, வழக்கு பதிவு செய்தனர்.முன்னெச்சரிக்கையாக கிராமத்தை சுற்றிலும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கைது பயத்தால் கிராமத்தின் பலரும், காட்டுக்குள் சென்று பதுங்கினர். கிராமமே வெறிச்சோடி காணப்பட்டது.சமீபத்தில் கிராமத்தில் மறு ஓட்டுப்பதிவு நடந்தது. காலை 7:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை 71 பேர் மட்டுமே ஓட்டு போட்டனர்.கிராமத்தினர் காட்டுக்குள் பதுங்கியிருப்பதை அறிந்த, சாம்ராஜ்நகர் மாவட்ட நிர்வாகம், அவர்களை கண்டுபிடிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது. போலீசாரும் இன்டிகநத்தா கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் தேடி, பதுங்கியிருந்தவர்களை கண்டுபிடித்து ஊருக்கு அழைத்து வந்தனர்.'கலவரத்தில் பங்கேற்றோர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கு பிரச்னை இல்லை. பயமின்றி இருங்கள்' என, கிராமத்தினருக்கு ஆறுதல் கூறினர்.