உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சட்டசபை, மேல்சபையை முடக்கிய எதிர்க்கட்சியினர் ஒரு நாள் முன்னதாகவே முடிந்த கூட்டத்தொடர்

சட்டசபை, மேல்சபையை முடக்கிய எதிர்க்கட்சியினர் ஒரு நாள் முன்னதாகவே முடிந்த கூட்டத்தொடர்

பெங்களூரு: 'மூடா' முறைகேடு குறித்து, சட்டசபை, மேல்சபையில் விவாதிக்க அனுமதி மறுத்ததால், இரண்டு நாட்களாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால், இரு சபைகளும் ஒருநாள் முன்னதாகவே முடித்து வைக்கப்பட்டன.'மூடா' எனும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 மனைகள் ஒதுக்கியதில் நடந்துள்ள முறைகேடு தொடர்பாக, சட்டசபையில் விவாதிப்பதற்கு வாய்ப்பு தரும்படி பா.ஜ.,வினர் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.சபாநாயகர் காதர் அனுமதி அளிக்கவில்லை. பா.ஜ.,வினர் தொடர் தர்ணாவால், சபை நேற்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டது. நேற்று காலை சட்டசபை கூடியதும் பா.ஜ.,வினர், சபாநாயகர் இருக்கை முன், தங்கள் தர்ணாவை தொடர்ந்தனர். மூடா முறைகேடு தொடர்பான ஆவணங்களை காண்பித்து, விவாதிக்க அனுமதி தரும்படி வலியுறுத்தினர்.அப்போது நடந்த விவாதம்:எதிர்க்கட்சி தலைவர் அசோக்: நேற்று நீங்கள் மிகவும் கோபமாக இருந்தீர்கள். ரத்த அழுத்தம் அதிகமாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இதனால் நாங்கள் பேசியதை, நீங்கள் கேட்டு கொள்ளவில்லை. இன்று மிகவும் உற்சாகத்துடன் உள்ளீர்கள். இன்றைக்காவது எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள்.சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல்: விதிமுறையை மீறி சட்டசபையை நடத்த முடியாது. எதிர்க்கட்சியில், பல மூத்த உறுப்பினர்கள் உள்ளனர். சூழ்நிலையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒருமுறை ஒத்திவைப்பு தீர்மானத்தை, சபாநாயகர் நிராகரித்த பின், மீண்டும் விவாதிக்க முடியாது. சபாநாயகர் முடிவை அறிவித்த பின், மீண்டும் மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை.சபாநாயகர் காதர்: தர்ணாவை விட்டு விட்டு, அனைவரும் அவரவர் இருக்கைக்கு சென்று அமருங்கள். சபையை சுமுகமாக நடத்த ஒத்துழையுங்கள். உங்களுடைய தீர்மானத்தை நிராகரித்து விட்டேன். நிகழ்ச்சி நிரல்படி, சட்டசபையை நடத்த வேண்டி உள்ளது.(ஆனாலும், பா.ஜ., வினர் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். முதல்வரையும், காங்கிரஸ் அரசையும் கண்டித்து கோஷம் எழுப்பி கொண்டே இருந்தனர். எவ்வளவு சொல்லியும் கேட்காததால், சட்டசபையை, 10 நிமிடங்கள் சபாநாயகர் ஒத்தி வைத்தார். மீண்டும் சட்டசபை கூடியதும், பா.ஜ.,வினர் தங்கள் தர்ணாவை தொடர்ந்தனர்)அப்போது, சட்ட மசோதாக்கள், அறிக்கைகள் தாக்கல் செய்யும்படி அரசுக்கு சபாநாயகர் அறிவுறுத்தினார். அதன்படி அரசு தரப்பிலும் தாக்கல் செய்யப் பட்டன. தொடர் தர்ணாவால், சட்டசபையை, மதியம் 2:30 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார்.ஆனால், மாலை 4:05 மணிக்கு தான் மீண்டும் சபை கூடியது. அப்போதும் தர்ணா தொடர்ந்தது. இதற்கிடையில், சில உறுப்பினர்கள் கேள்விகள் கேட்பதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.தர்ணா தொடர்ந்ததால், 10 நிமிடங்கள் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் 4:43 மணிக்கு கூடியதும், பா.ஜ.,வினர் தங்கள் தர்ணாவை தொடர்ந்தனர்.சபாநாயகர்: இம்மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை, 8 நாட்களில், 37 மணி நேரம் 2 நிமிடங்கள் கூட்டத்தொடர் நடந்தது. சமீபத்தில் இறந்த பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி, கவர்னர் ஒப்புதல் அளித்த சட்ட மசோதா குறித்து, செயலர் அறிக்கை தாக்கல் செய்தார்.கணக்கு தணிக்கை அறிக்கை உட்பட முக்கிய மசோதாக்கள், தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. 146 அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. 13 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்து, 12 நிறைவேற்றப்பட்டன. கிரேட்டர் பெங்களூரு ஆணைய சட்ட மசோதாவை, கூட்டு கமிட்டி பரிசீலனைக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட், ஒரே தேசம் ஒரே தேர்தல், சட்டசபை - லோக்சபா தொகுதிகள் மறுவரை ஆகிய மத்திய அரசின் முடிவுகளுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.உறுப்பினர்கள் மூலம் மொத்தம் 2,370 கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், வாய்மொழியாக பதில் சொல்ல வேண்டிய, 135 கேள்விகளுக்கு, 112க்கு பதில்கள் தரப்பட்டுள்ளன. எழுத்து பூர்வமாக பதில் அளிக்க கூடிய 1,902 கேள்விகளில், 1,438 கேள்விகளுக்கு பதில்கள் தரப்பட்டன. சட்டசபை கூட்டத்தொடர் நடத்துவதற்கு ஒத்துழைப்பு தந்த முதல்வர், அமைச்சர்கள், துணை சபாநாயகர், மாநில தலைமை செயலர், சட்டசபை செயலர், உறுப்பினர்கள், அதிகாரிகள், ஊடகத்தினர் என அனைவருக்கும் நன்றி.(சபாநாயகர் பேசி கொண்டிருந்த வேளையில், மூடா முறைகேட்டை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்கும்படியும், ஒரு நிமிடம் கூட முதல்வர் இருக்கையில் இருக்காமல் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும். கொடுங்கள், கொடுங்கள், ராஜினாமா கடிதம் கொடுங்கள், பாரத் மாதாகி ஜே, சபாநாயகர் பயணம் - காங்கிரஸ் பக்கம், மூடா, மூடா, என்று கை தட்டி கொண்டு கோஷம் எழுப்பினர்)பின், மாலை 4:53 மணி அளவில் காலவரையின்றி சட்டசபை கூட்டத்தொடரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இதன்பின், தேசிய கீதத்துடன், கர்நாடக மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. சட்டசபை போன்று, மேல்சபையிலும் பா.ஜ.,வினர் மூடா குறித்து தர்ணா நடத்தியதால், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர், இம்மாதம் 15ம் தேதி முதல் 26ம் தேதி (இன்று) வரை நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்க்கட்சியினரின் தொடர் தர்ணாவால், இன்று நிறைவு பெறுவதற்கு பதில், நேற்றே முடித்து கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்