ஓநாய்கள் வேட்டை தொடர்கிறது மேலும் ஒரு குழந்தையை கொன்றது
பஹ்ரைச்: உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச்சில், ஓநாய் தாக்குதலில் மேலும் ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உ.பி.,யின் பஹ்ரைச் மாவட்டத்தில், சமீபத்தில் ஓநாய்கள் படையெடுத்தன. இதனால் அம்மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் பீதி அடைந்தனர். ஓநாய்கள் தாக்குதலில் கடந்த இரு மாதங்களில் மட்டும், ஏழு குழந்தைகள் உட்பட எட்டு பேர் உயிரிழந்தனர்.இதையடுத்து, ஓநாய்களை பிடிக்க, 'ஆப்பரேஷன் பேடியா' என்ற பெயரில் அதிரடி தேடுதல் வேட்டை நடக்கிறது. இதுவரை நான்கு ஓநாய்கள் பிடிபட்ட நிலையில், மீதமுள்ளவற்றை பிடிக்க வனத்துறையினர் முழு வீச்சில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பஹ்ரைச் மாவட்டத்தின் ஹார்டி பகுதியில் உள்ள கரேதி குருதத் சிங் என்ற கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு, இரண்டரை வயது பெண் குழந்தை, தன் தாயுடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தது.அப்போது அங்கு வந்த ஓநாய், குழந்தையை கவ்விச் சென்றது. குழந்தையின் சிதைந்த உடல், கிராமத்திலிருந்து, 1 கி.மீ., தொலைவில் உள்ள இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதே போல், பராபிகா பகுதியின் மவுஜா கோடியா என்ற கிராமத்தில், 70 வயது மூதாட்டி கமலா தேவியை, நேற்று அதிகாலை ஓநாய் தாக்கியது. இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பஹ்ரைச் மாவட்டத்தில், நாளுக்கு நாள் ஓநாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருவது, அம்மாவட்ட மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.
புது முயற்சி
பஹ்ரைச் கோட்ட வன அலுவலர் அஜித் பிரதாப் சிங் நேற்று கூறியதாவது:ஓநாய்கள் தொடர்ந்து இருப்பிடங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றன. இரவில் வேட்டையாடி விட்டு, காலையில் குகைகளுக்குத் திரும்புகின்றன. குடியிருப்புப் பகுதிகளில் இருந்து ஓநாய்களை விரட்டியடிக்க, புதிய முயற்சியை கையாண்டு வருகிறோம்.அதன்படி, ஓநாய்களின் குகைகளுக்கு அருகில், குழந்தைகளின் சிறுநீரில் நனைந்த வண்ணமயமான, 'டெடி' பொம்மைகளை வைத்துள்ளோம். இந்த வாசனையை நோக்கி ஓநாய்கள் வரும் போது, நாங்கள் வைத்துள்ள பொறியில் அவை சிக்கும். விரைவில் அனைத்து ஓநாய்களையும் பிடிப்போம். பொது மக்கள் அத்தியாவசியமின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.