உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து நிர்வாகம் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து நிர்வாகம் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது

புதுடில்லி:பயிற்சி மைய இறப்புகள் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்கிய உயர் நீதிமன்றம், அரசு நிர்வாகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்று கருத்துத் தெரிவித்துள்ளது.ஜூலை 27ல் கனமழை பெய்தது. டில்லி பழைய ராஜேந்தர் நகர் பகுதியில் உள்ள ராவ்வின் ஐ.ஏ.எஸ்., படிப்பு மைய கட்டடத்தின் அடித்தள வெள்ளத்தில் மூழ்கி மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.இதுதொடர்பாக அடுத்தடுத்த விசாரணையில் கட்டட உரிமையாளர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த வழக்கில் கட்டட உரிமையாளர்களான பர்விந்தர் சிங், தஜிந்தர் சிங், ஹர்விந்தர் சிங், சர்ப்ஜித் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளனர்.இவர்கள் ஜாமின் கேட்டுத் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் குமார் சர்மா முன்னிலையில் நடந்து வந்தது. நேற்று இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன.குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் வாதாடிய வக்கீல், வழக்கு விசாரணைக்கு மனுதாரர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று உறுதி அளித்திருந்தார். இவர்களுக்கு ஜாமின் வழங்க சி.பி.ஐ., கடும் எதிர்ப்பு தெரிவித்தது.குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி பிறப்பித்த உத்தரவு:அரசு நிர்வாகம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டு, நகரின் பயிற்சி மையங்களின் நிலையைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு நவம்பர் 30 ஆம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது.பணம் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் அப்பாவி மக்கள், தங்கள் உயிரை இழக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன.நாடு முழுவதிலுமிருந்து குழந்தைகள் தங்கள் கல்விக்காக தலைநகருக்கு வருகிறார்கள், பயிற்சி மைய உரிமையாளர்கள், இதுபோன்ற அப்பாவி உயிர்களைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.அனைத்து பயிற்சி மையங்களையும் ஆய்வு செய்து, பாதுகாப்பற்ற கட்டடங்கள் அல்லது பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் அவை இயங்காமல் இருப்பதை உறுதி செய்ய, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியின் கீழ் ஒரு குழுவை நியமிக்குமாறு, துணைநிலை கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைத்து நவீன வசதிகள் மற்றும் குடிமை வசதிகளுடன் புதிதாக உருவாக்கப்பட்ட பயிற்சி மையங்களை ஆய்வு செய்ய, டில்லி மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவரை கொண்ட குழுவை அமைத்து மூன்று மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.மூன்று பிரகாசமான இளம் மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது எச்சரிக்கை மணி. இந்த நீதிமன்றம் முன்பு கூட அங்கீகரிக்கப்படாத பயிற்சி மையங்கள் குறித்த பிரச்னையை எழுப்பியது. துரதிர்ஷ்டவசமாக அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தவறிவிட்டனர்.இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ