வளர்ப்பு மகளை கிக் பாக்சராக உருவாக்கிய திருநங்கை
ஆதரவற்ற சிறுமியை தத்தெடுத்து வளர்த்து, அவரை 'கிக் பாக்சர்' வீராங்கனையாக உருவாக்கிய திருநங்கை, தங்களாலும் சாதிக்க முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்துள்ளார்.மைசூரை சேர்ந்த அக்ரம் பாஷா என்பவர் திருநங்கையாவார். பெண்ணாக மாறிய இவரை, பெற்றோர் வீட்டில் இருந்து வெளியேற்றினர். அதன்பின் தன் பெயரை ஷபானா என, மாற்றி கொண்டார். சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டு, பல அவமதிப்புகளை கடந்து தன்னம்பிக்கையுடன், நாட்களை கடத்தினார்.இவரது உறவினர் ஒருவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், தன் நான்கு மகள்களை வளர்க்க முடியவில்லை என, அவர்களை விட்டு விட்டு, வீட்டை விட்டு சென்று விட்டார். ஆதரவற்ற நிலையில் இருந்த நான்கு சிறுமியரை பார்த்து பரிதாபமடைந்த ஷபானா, அவர்களை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.மற்றவர் கொடுப்பதை வைத்து, நால்வரையும் அன்புடன் வளர்க்கிறார். நான்கு பேரில் பாத்திமா என்பவர், தன் 12 வயதிலேயே 'கிக் பாக்சிங்'கில் ஆர்வம் காண்பித்தார். இவரை ஊக்கப்படுத்திய ஷபானா, வளர்ப்பு மகளின் கனவை நனவாக்க முடிவு செய்தார். பணம் சேர்த்து வைத்து, 'எலைட் கிக் பாக்சிங்' அகாடமியில் சேர்த்தார்.இவர்களுக்கு கிக் பாக்சிங் பயிற்சியாளர் ஜஸ்வநாத், கர்நாடக கிக் பாக்சிங் அசோசியேஷனின் முதன்மை செயலர் ரவி உதவி செய்து வழி காண்பித்தனர். ஏற்கனவே மாவட்ட, மாநில, தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டிகளில் பங்கேற்று, 23 பதக்கங்கள் பெற்றுள்ளார். திருநங்கைகளாலும், சாதனை செய்ய முடியும் என்பதை, ஷபானா நிரூபித்துள்ளார்.சமீபத்தில் கர்நாடக கிக் பாக்சிங் அசோசியேஷன் சார்பில், மைசூரு யுவராஜா கல்லுாரியில் நடந்த கிக் பாக்சிங் போட்டியின், இரண்டு பிரிவுகளில் பாத்திமா பங்கேற்று தங்கப்பதக்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் பெற்றார். இதன் மூலம் மைசூருக்கு பெருமை சேர்த்தார்.தற்போது தேசிய, சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க தயாராகிறார்.ஷபானா கூறியதாவது:குடும்பத்தினரின் புறக்கணிப்பு, பாரபட்சத்தால் என் வாழ்க்கை பாழானது. ஆனால், என்னை நேசிப்பவர்களின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும். இப்போது எனக்கு பொறுப்பு அதிகரித்துள்ளது. பாத்திமா என் மகள் மட்டுமல்ல. அவள் என் பெருமை; என் பரம்பரை. அவளுக்கு ஊக்கமளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பாத்திமா கூறியதாவது:என் அம்மா தான், எனக்கு சக்தி அளித்துள்ளார். என் நம்பிக்கையும் அவர்தான். யார் கண்களுக்கும் தென்படாத, என் கிக் பாக்சிங் திறமை என் அம்மாவின் கண்களுக்கு தெரிந்தது. என் கனவை நனவாக்க உழைக்கிறார்.என் அம்மாவை, மேலும் பெருமைப்பட வைக்க வேண்டும் என்பது என் விருப்பம். அனைவரின் முன்னாலும், என் தாய் தலை நிமிரும்படி செய்வதே, என் குறிக்கோளாகும். என்றாவது நானும் பயிற்சியாளராக உருவாக வேண்டும். என்னை போன்று விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, பயிற்சி அளிக்க விரும்புகிறேன். என் அம்மாவின் அன்பு, தியாகம் இல்லாமல், என்னால் சாதித்திருக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
அம்மா தான் எல்லாம்
- நமது நிருபர் -