காட்டுயானை தாக்கி இருவர் பலி; தடுப்பதற்கு அரசு தீவிர முயற்சி
பீதர்,; ''காட்டு யானைகள் மனிதர்களை தாக்குவதை தவிர்ப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறி உள்ளார்.கர்நாடகாவில் கடந்த இரண்டு நாட்களாக காட்டு யானைகள் தாக்கியதில் இருவர் உயிரிழந்து உள்ளனர். இதில் ஹாசனை சேர்ந்த அனில், 28; கோலாரை சேர்ந்த மஞ்சுளா, 44, ஆகியோர் உயிரிழந்தனர். இவ்விஷயம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.இதுபோன்ற சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. இதனால், யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் வாழ்வோரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று பலரும் வேதனைப்படுகின்றனர்.இது தொடர்பாக பீதரில், நேற்று வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே அளித்த பேட்டி: யானை தாக்கி உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். இவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது போன்ற சம்பவங்கள் காலை, மாலை நேரங்களில் தான் அதிகம் நடக்கின்றன. எனவே, மலைப்பகுதியில் வாழ்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வனப்பகுதி குறைவு
யானைகள் நடமாட்டம் குறித்த தகவல்களை வனத்துறையினருக்கு உடனடியாக அளிக்க வேண்டும். யானைகள், மனிதர்களை தாக்குவது புதிது அல்ல; இது பல ஆண்டுகளாக நடக்கிறது. தற்போது, வன விலங்குகள் அதிகமாக இருப்பதால் அதிகமாக நடக்கிறது. ஆனால், வனப்பகுதிகள் குறைந்து வருகின்றன.மாநிலத்தில் 2024 - 25 ல், யானைகள் தாக்குதலை தவிர்க்க, தடுப்பு வேலிகள், ரயில்வே தடுப்புகள் போன்றவை 78 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்பட்டன. தற்போது, 41 கி.மீ., துார பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த மாதம் 31ம் தேதி, 103 கி.மீ., துாரத்திற்கு தடுப்பு வேலிகளை அமைக்கும் பணிகள் துவங்க உள்ளன.கர்நாடகாவில் மொத்தம் 6,395 யானைகள் உள்ளன. இந்தியாவிலேயே கர்நாடகாவில் தான் அதிக எண்ணிக்கையில் யானைகள் உள்ளன. யானைகள் நடமாட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கு ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழு மூலம் யானைகள் நடமாட்டத்தை பொது மக்கள் அறிய முடியும். யானைகள் முகாம்
பத்ரா சரணாலயத்தில் 2,000 ஏக்கரில் யானைகள் முகாம் அமைப்பதற்கு திட்டமிட்டு வரப்படுகிறது. யானைகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காட்டிற்கு வெளியே சுற்றித்திரியும் 150க்கும் மேற்பட்ட யானைகளை மீண்டும் முகாமிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு அதிக காலம் ஆகும். மனிதர்களை, யானைகள் தாக்குவதை தடுப்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.