10 மாநிலங்களில் 12 புதிய தொழில் நகரங்கள் ரூ.28,602 கோடி முதலீட்டில் அமைகிறது மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
புதுடில்லி,:நாட்டிலுள்ள பத்து மாநிலங்களில் 12 தொழில் நகரங்களை 28,602 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் விளக்கினார்.தொழில் நகரங்கள் குறித்து அதில் இடம்பெற்ற விபரம் வருமாறு:நாட்டின் உற்பத்தியை விரைவுபடுத்தி, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க இந்த தொழில் நகரங்கள் உதவும். 28,602 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள 12 தொழில் நகரங்கள், ஆறு முக்கிய தொழில் வழித்தடங்களாக உருவாகும். நாட்டின் தொழில் நிலப்பரப்பில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த திட்டத்திற்கு, தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டு திட்டத்தின்கீழ், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. உலக அளவில் போட்டி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க ஊக்கம் அளிப்பதாக, உலகத் தரத்திலான பசுமைவழித்தட ஸ்மார்ட் நகரங்களாக, இந்த தொழில் நகரங்கள் உருவாக்கப்படும். புதிய தொழில் நகரங்களின் வாயிலாக 10 லட்சம் பேருக்கு நேரடியாகவும் 30 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். 10 மாநிலங்களில் அமையும் 12 தொழில் நகரங்களில், மொத்தம் 1.52 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் திரட்டப்பட வாய்ப்பு உள்ளது. புதிய தொழில் நகரங்கள் அமைவதன் வாயிலாக, உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றும் அரசின் முயற்சியில், ஒரு மைல்கல்லாக இருக்கும்.சாலை போக்கு வரத்துத்துறையின் 'பாரத் மாலா' திட்டம்போல, 12 புதிய தொழில் நகரங்கள், இந்திய வரைபடத்தில், தங்க நாற்கர சாலைகளின் முதுகெலும்பாக, ஒரு 'கிராண்ட் நெக்லஸ்' போல் அமையும். பிரதமரின் 'கதிசக்தி' திட்டத்தின்கீழ் அமைய வுள்ள இந்நகரங்களில் அமைய உள்ள தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள், நடந்து பணிக்குச் செல்லும் வகையில் திட்டமிட்ட நகரமாக உருவாகவுள்ளன. மண்டல அளவில் சமச்சீரான வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகை யிலும் நீடித்த, நிலையான முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் இந்த தொழில் நகரங்கள் இருக்கும். ஆலை அமைக்க முன்வரும் உலகளாவிய முத லீட்டாளர்கள், உடன டியாக நில ஒதுக்கீடு பெறும் வகையில் இவை இருக்கும்.தொழில் நகரங்களாக ஏற்கனவே 6 இடங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ள நிலையில், தற்போதைய 12 நகரங்களையும் சேர்த்து மொத்தம் 20 தொழில் நகரங்கள் அமைய இருக்கின்றன.