ராம்நகர் : ''மாண்டியா தொகுதியில் போட்டியிட வேண்டாம் என, நினைத்திருந்தேன். ஆனால் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சென்னபட்டணாவை என் உயிர் உள்ளவரை மறக்க முடியாது,'' என மத்திய கனரக தொழில்கள் நலத்துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார்.ராம்நகர், சென்னபட்டணாவில், நேற்று அவர் அளித்த பேட்டி:நான், முதல்வராக இருந்த போது, விவசாயிகளின் 25,000 கோடி ரூபாய் கடனை ரத்து செய்தேன். நான் உயிருடன் உள்ளவரை, சென்னபட்டணாவை மறக்கமாட்டேன். எம்.பி.,யானதால், சென்னபட்டணா எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துள்ளேன். கட்டாயம்
லோக்சபா தேர்தலில், நான் மாண்டியா தொகுதியில் போட்டியிட வேண்டாம் என, நினைத்திருந்தேன். ஆனால் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. துணை முதல்வராக உள்ள சிவகுமாரை, சென்னபட்டணாவில் போட்டியிடாதீர்கள் என, கூற முடியுமா. தாராளமாக போட்டியிடட்டும். அவருக்கு இப்போதாவது, சென்னபட்டணா மீது அக்கறை வந்துள்ளதை பாராட்டலாம்.பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் தோற்றதால், சென்னபட்டணாவில் வெற்றி பெற்று, பழி தீர்க்க முயற்சிக்கிறார். தற்போது மத்திய கனரக தொழில் துறை அமைச்சராக பணியாற்றுகிறேன். தங்கள் வேலைகளை செய்து கொடுப்பேன் என, மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். நான், விவசாயத்துறை அமைச்சர் ஆவார் என, எதிர்பார்த்தீர்கள். வேறு துறை கிடைத்துள்ளது. மக்கள் என் மீது வைத்த எதிர்பார்ப்பை நினைத்து பயப்படுகிறேன். மாவட்ட மேம்பாடு
ராம்நகர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராமலிங்கரெட்டி எப்போதாவது உங்கள் பிரச்னை என்ன என்பதை, கேட்டறிந்தாரா. மாவட்ட மேம்பாடு குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசித்தாரா. ஆனால் நான் அதிகாரிகளை அழைத்து, முக்கிய விஷயங்கள் பற்றி, ஆலோசனை நடத்தி உள்ளேன்.நாட்டின் நலனை மனதில் கொண்டு, நானும், யோகேஸ்வரும் ஒன்று சேர்ந்துள்ளோம். ராம்நகரை மேம்படுத்தியது நானும், தேவகவுடாவும்தான். சர்வதேச அளவிலான பட்டு மார்க்கெட் அமைத்தேன். ராஜிவ்காந்தி மருத்துவமனை கொண்டு வர முயற்சித்தேன்.டொயோட்டா நிறுவனத்தை மாநிலத்துக்கு கொண்டு வந்தது, நானும், தேவகவுடாவும். காங்கிரசார் கல்லெறிந்தபடி அமர்ந்திருக்கும் கிராக்கிகள். எந்த அளவுக்கு பணத்தை செலவிட முடியுமோ, அவ்வளவு பணத்தை செலவிட்டனர். இப்போது துாக்கம் கெட்டு தவிக்கின்றனர். இவர்களை போன்று பத்து பேர் பிறந்து வந்தாலும், எங்களை ஒன்றும் செய்ய முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.