உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நம்பிக்கை நட்சத்திரம் வேதா

நம்பிக்கை நட்சத்திரம் வேதா

இந்தியாவில் ஆண்கள் கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் வரவேற்பு, பெண்கள் கிரிக்கெட்டுக்கு ஒரு காலத்தில் அவ்வளவாக கிடைத்தது இல்லை. ஆண்களுக்கு நிகராக தங்களாலும் சிக்ஸர்கள் விளாச முடியும் என, கிரிக்கெட் வீராங்கனைகள் சாதித்துக் காண்பித்தனர். இதனால் தற்போது பெண்கள் கிரிக்கெட்டுக்கும் மவுசு அதிகரித்து உள்ளது.

கருப்பு பெல்ட்

கர்நாடகாவை சேர்ந்த பெண்களும், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து தங்களது ஆட்டம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் ஒருவர் வேதா கிருஷ்ணமூர்த்தி, 31.மலைநாடு மாவட்டம் என்று அழைக்கப்படும் சிக்கமகளூரின் கடூரை சேர்ந்தவர் தான் வேதா கிருஷ்ணமூர்த்தி. 1992ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பிறந்தவர்.தன்னுடைய மூன்றாவது வயதில் தெருவில் கிரிக்கெட் விளையாடத் துவங்கினார். சிறு வயதில் இருந்தே தற்காப்பு கலையான கராத்தே மீதும் அவருக்கு ஆர்வம் அதிகம். முறையாக பயிற்சி பெற்ற அவர் தனது 12வது வயதில் கருப்பு பெல்ட் பெற்று அசத்தினார்.கடந்த 2005ல் தனது 13வது வயதில், சிக்கமகளூரில் உள்ள கர்நாடக இன்ஸ்டியூட் ஆப் கிரிக்கெட்டில், கிரிக்கெட் பயிற்சியை முறைப்படி துவங்கினார்.இவரது பேட்டிங் திறமையை உணர்ந்த பயிற்சியாளர் இர்பான் என்பவர், வேதாவின் திறமைகளை மெருகேற்ற, பெங்களூருக்கு அழைத்துச் செல்லும்படி, அவரது தந்தையிடம் கூறினார்.பின், வேதாவின் குடும்பம் பெங்களூருக்கு குடிபெயர்ந்தது. கர்நாடக கிரிக்கெட் நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். பெண் பயிற்சியாளர்களான அபூர்வா, சுமன் ஆகியோரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டார்.தனக்கு ரோல் மாடலாக, இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜை வேதா கருதுகிறார்.கர்நாடக கிரிக்கெட் நிறுவனம் சார்பில் நடந்த போட்டிகளில் வேதா தனது திறமையை வெளிப்படுத்தியதால், அவருடைய 18வது வயதில் இந்திய மகளிர் அணிக்காக ஆடும் வாய்ப்பு தேடி வந்தது.இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகமான அவர், முதல் போட்டியிலேயே பதற்றம் இன்றி விளையாடி 51 ரன்கள் எடுத்தார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.அதே ஆண்டில் 20 ஓவர் போட்டிகளிலும் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதால் 2015ல் 'பி' கிரேடு ஒப்பந்த பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றது.தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் 2016ல் 20 ஓவர் போட்டிகளில் தடுமாறியதால், இந்திய ஒரு நாள் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்.ஒரு நாள் அணியில் தொடர்ந்து விளையாடி வந்தார். அதிலும் பெரிய அளவில் பங்களிப்பு அளிக்காததால் 2018ல் இருந்து வாய்ப்பு கிடைக்கவில்லை.இதனால் கர்நாடகாவில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி ஓரளவு ரன் சேர்த்தார். ஆனாலும் இந்திய அணியில் மீண்டும் ஆட அவருக்கு வாய்ப்பு வரவில்லை.

தாய் மரணம்

இதற்கிடையில் 2021ம் ஆண்டு அவரது வாழ்க்கையின் சோகமான ஆண்டாக அமைந்தது. கொரோனாவால் தாய் செலுவம்பாதேவி, சகோதரி வத்சலா ஆகியோரை இழந்தார். 2022ல் கிரிக்கெட் வீரரான அர்ஜுன் ஹொய்சாலா என்பவரை திருமணம் செய்தார்.இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்காதது பற்றி வேதா கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ''பெண்கள் கிரிக்கெட், தற்போது வேறு நிலைக்கு சென்றுவிட்டது. ''இந்திய அணியில் அதிரடியாக அடித்து ஆட கூடிய வீராங்கனைகள் உள்ளனர். அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.''கடந்த 2018க்கு பின், நான் அணியில் இல்லை. ஆனாலும் மீண்டும் வருவேன். எனது தாய், தங்கையை இழந்தேன். ''எனது வாழ்வில் சில ஆண்டுகள் ஒரே சோதனையாக உள்ளது. சோதனையை தகர்த்தெறிவேன் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.வேதா கிருஷ்ணமூர்த்திக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்க நாமும் பிரார்த்திக்கலாமே! - -நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ