மணிப்பூரில் மீண்டும் வன்முறை: வாகனங்கள் மீது தாக்குதல்
இம்பால்: மணிப்பூரில் நேற்று மீண்டும் வன்முறை ஏற்பட்டது. பஸ்கள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். நேற்று நடந்த வன்முறையில் ஒருவர் பலியானார்.வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், இட ஒதுக்கீடு தொடர்பாக, கூகி - மெய்டி பிரிவினரிடையே, 2023 மே மாதம் மோதல் வெடித்தது. இதில், 260க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இனக் கலவரத்தால் ஒன்றரை ஆண்டு காலம் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது.மணிப்பூர் நிலவரம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு படையினருடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.அப்போது, மணிப்பூரில் மார்ச் 8 முதல், சாலைகளில் மக்கள் பாதுகாப்பாக நடமாடுவதை உறுதி செய்யும்படி அவர் உத்தரவிட்டார்.இதன்படி, மணிப்பூரில் மத்திய அரசின், 'தடையற்ற நிர்வாகம்' என்ற உத்தரவு நேற்று முதல் அமலானது. இரு ஆண்டுகளுக்கு பின், தலைநகர் இம்பாலில் இருந்து காங்போக்பி, சுராசந்த்பூர் உள்ளிட்ட மலை மாவட்டங்களுக்கு பஸ் சேவை துவங்கப்பட்டது.காங்போக்பி மாவட்டத்தின் காங்கிபாய் பகுதியில், பயணியர் வாகனம் மீது மர்ம கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதே போல், சேனாபதி மாவட்டத்திற்கு சென்ற பஸ் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் மர்ம நபர்களை பாதுகாப்பு படையினர் விரட்டி அடித்தனர்.நேற்று நடந்த வன்முறையில் ஒருவர் பலியானார். சுராசந்த்பூர், சேனாபதி மாவட்டங்களில் பெரும்பாலான சாலைகளை, தடுப்புகள் வைத்து மர்ம நபர்கள் அடைத்திருந்தனர்.இதற்கிடையே, மெய்டி சிவில் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பான, மெய்டி கூட்டணியும், தாடோ பழங்குடியினரின் உச்ச அமைப்பான தாடோ இன்பி மணிப்பூரும், அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன.