உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரவு 10:00 மணி வரை தொடர்ந்த ஓட்டுப்பதிவு

இரவு 10:00 மணி வரை தொடர்ந்த ஓட்டுப்பதிவு

பெங்களூரு ரூரல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஆனேக்கல் ஹுல்லஹள்ளி ஓட்டுச்சாவடியில், 1,794 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு மாலை 6:00 மணியை கடந்தும், நீண்ட வரிசையில் வாக்காளர்கள் காத்திருந்தனர். அவர்கள் ஓட்டுப்போட்டு முடிக்க, இரவு 10:00 மணி ஆனது.

பா.ஜ., வேட்பாளர் மீது வழக்கு

சிக்கபல்லாபூர் பா.ஜ., வேட்பாளர் சுதாகர். இவரது ஆதரவாளர் கோவிந்தப்பா. பெங்களூரு ரூரல் நெலமங்களா மாதநாயக்கனஹள்ளியில் வசிக்கிறார். இவர் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம், நகைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, நேற்று முன்தினம் வருமான வரி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. கோவிந்தப்பா வீட்டில் நடத்திய சோதனையில் 4.80 கோடி ரூபாய் சிக்கியது. இந்த பணம் சுதாகருக்கு சொந்தமானது என்று தெரியவந்ததால், சுதாகர் மீது தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரில், மாதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இரவில் சிறப்பு அட்டை வழங்கல்

பெங்களூரு ரூரல் தொகுதியில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷை வெற்றி பெற வைக்க, ஆர்.ஆர்.நகர் தொகுதியில் இரவோடு இரவாக வாக்காளர்களுக்கு ஏ.டி.எம்., கார்டு வடிவில் அட்டை வினியோகிக்கப்பட்டதாக, முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டினார். பா.ஜ., வேட்பாளர் மஞ்சுநாத்தை வெற்றி பெற வைக்க, பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னா வாக்குறுதி அட்டை வழங்கியதாக, சுரேஷ் குற்றச்சாட்டு கூறினார். இதன் மூலம் பணம் வினியோகிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மொபைலில் படம்

ஓட்டு போடும் போது வேட்பாளர்களோ, வாக்காளர்களோ எந்த கட்சியின் அடையாளத்துடன், ஓட்டுச்சாவடிக்கு வரக்கூடாது என்று விதிமுறை உள்ளது. ஆனால் சித்ரதுர்கா காங்கிரஸ் வேட்பாளர் சந்திரப்பா, தோளில் காங்கிரஸ் கட்சி துண்டு அணிந்து ஓட்டு போட்டார். தேர்தல் நடத்தை விதிகளை அவர் மீறியும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பா.ஜ., குற்றம்சாட்டியது. இதேபோல தட்சிண கன்னடாவின் புத்துாரைச் சேர்ந்த ஒருவர், ஓட்டுச்சாவடிக்குள் மொபைல் போனை எடுத்து சென்று உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் பத்மராஜுக்கு ஓட்டு போட்டதை வீடியோ எடுத்து, 'வாட்ஸாப்' குரூப்பில் ஷேர் செய்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை