லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, ராய்ச்சூர் ராஜாவாக இருக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கர்நாடகா - ஆந்திரா மாநில எல்லையில் உள்ளது ராய்ச்சூர். கல்வி, வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. ராய்ச்சூரில் அனல்மில் நிலையம் இருந்தும், சரியான வேலைவாய்ப்பு இல்லாததால், ராய்ச்சூர் மக்கள் ஆந்திராவுக்கு வேலை தேடிச் செல்கின்றனர். கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், ராய்ச்சூர் மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.ராய்ச்சூர் லோக்சபா தொகுதி 1952 முதல் 2019 வரை, 17 தேர்தல்களை சந்தித்து உள்ளது. காங்கிரஸ் 13 முறையும், பா.ஜ., இரண்டு முறையும், ம.ஜ.த., சுதந்திர கட்சி ஆகியவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.இந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக எம்.பி., அமரேஸ்வர் நாயக், காங்கிரஸ் வேட்பாளராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி குமார் நாயக் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். 2 முறை அமைச்சர்
ராஜா அமரேஸ்வர் நாயக் 2 முறை எம்.எல்.ஏ.,வாக, இரண்டு முறை அமைச்சர், ஒரு முறை எம்.பி.,யாக இருந்தவர். ஆனால் குமார் நாயக் தேர்தல் அரசியலில், முதல் முறையாக கால் பதிக்கிறார். 1990ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., குழுவை சேர்ந்த குமார் நாயக், 1999 முதல் 2002 வரை ராய்ச்சூர் மாவட்ட கலெக்டராக இருந்துஉள்ளார்.அப்போது ராய்ச்சூரில் நிலவிய, பல பிரச்னைகளை தீர்க்க, முன்னுரிமை அளித்தார். மக்கள் நன்மதிப்பு பெற்றார். அதன்பின்னர் ராய்ச்சூரில் பல கலெக்டர்கள் பணியாற்றினாலும், குமார் நாயக் அளவிற்கு யாரும் வேலை செய்யவில்லை என, மக்கள் பேசி வருகின்றனர். இதனால் காங்கிரஸ் அவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. மக்களால் தேர்வு
ராய்ச்சூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்டு, யாத்கிரின் சுர்பூர், ஷகாபூர், யாத்கிர்; ராய்ச்சூரின் ராய்ச்சூர் ரூரல், ராய்ச்சூர், மான்வி, தேவதுர்கா, லிங்கசுகுர் ஆகிய, எட்டு தொகுதிகளில் வருகின்றன. இதில் சுர்பூர் எம்.எல்.ஏ.,வாக இருந்த, காங்கிரசின் ராஜா வெங்கடப்ப நாயக் இறந்துவிட்டார். மற்ற ஏழு தொகுதிகளில் காங்கிரசுக்கு 4, பா.ஜ.,வுக்கு 2, ம.ஜ.த.,வுக்கு ஒரு எம்.எல்.ஏ., உள்ளனர்.ராஜா அமரேஸ்வர் நாயக்கிற்கு 'சீட்' கொடுக்க, பா.ஜ.,வில் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரசில் இருந்து பா.ஜ., வந்த பி.வி.நாயக் சீட் கேட்டார். அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் கோபத்தில் உள்ளனர். இது ராஜா அமரேஸ்வர் நாயக்கிற்கு 'மைனசாக' உள்ளது.குமார் நாயக் அரசியலுக்கு புதியவர் என்பதால், எம்.எல்.ஏ.,க்களுடன் இன்னும் நெருக்கம் ஏற்படவில்லை. இது அவரின் 'வீக் பாயின்டாக' இருக்கிறது. ராய்ச்சூரின் ராஜாவாக யார் வர போகிறார் என வாக்காளர்கள் ஆவலுடன் உள்ளனர்- நமது நிருபர் -.