உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 7 குழந்தைகளை வேட்டையாடிய ஓநாய்: பொறி வைத்து பிடித்த உ.பி., வனத்துறை

7 குழந்தைகளை வேட்டையாடிய ஓநாய்: பொறி வைத்து பிடித்த உ.பி., வனத்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தர பிரதேசத்தின் பஹராயிச் மாவட்டத்தில், மனிதர்களை, குறிப்பாக குழந்தைகளை வேட்டையாடி வந்த ஓநாய் கூட்டத்தின் மேலும் ஒரு ஓநாய் சிக்கியது. உத்தர பிரதேசத்தின் பஹராயிச் மாவட்டம் மாஷி தாலுகாவில் வனப் பகுதியை ஒட்டிய கிராமங்களில் இரவு நேரத்தில் வீடுகளுக்குள் நுழையும் இந்த ஓநாய்கள், குழந்தைகளை கவ்விச் சென்று, இரையாக உண்பதை வழக்கமாக வைத்துள்ளன.

'ஆப்பரேஷன் பேடியா'

கடந்த, 45 நாட்களில் மட்டும் ஏழு குழந்தைகள் உட்பட எட்டு பேரைக் கொன்றுள்ளன. இந்தக் கூட்டத்தில் ஆறு ஓநாய்கள் இருந்தது தெரியவந்தது.வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில், ஏற்கனவே மூன்று ஓநாய்கள் சிக்கின. ஆனால், மூன்று ஓநாய்கள், வனத்துறைக்கு ஆட்டம் காட்டி வந்தன. இதையடுத்து, 250 வனத்துறை ஊழியர்கள், ட்ரோன்கள் உள்ளிட்டவை வாயிலாக, அவற்றை பிடிக்க தீவிர முயற்சி எடுத்து வந்தனர். 'ஆப்பரேஷன் பேடியா' என்ற பெயரில் இந்த நடவடிக்கை துவங்கியது. ஹிந்தியில் பேடியா என்றால், தமிழில் ஓநாய் என்று அர்த்தம். வனத்துறையினரின் இந்த நடவடிக்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரடியாக கண்காணித்து வந்தார். இந்நிலையில் வனத்துறையினர் வைத்த கூண்டில், மற்றொரு ஓநாய் நேற்று சிக்கியது.அதே நேரத்தில், இரண்டு ஓநாய்கள் தப்பின. இதனால், அந்தப் பகுதியில் உள்ள 35 கிராமங்களைச் சேர்ந்த, 50,000 பேர் பதற்றத்தில் உள்ளனர்.இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், 'உடல் வெப்ப நிலையை கணக்கிடும் தெர்மல் ஸ்கேனர் உதவியுடன், இந்த ஓநாயை பிடித்தோம். விரைவில் மற்ற ஓநாய்களை பிடித்து விடுவோம்' என்றனர். ஓநாயை பிடித்த வனத்துறையினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அடிமை

'ஓநாய்கள் வழக்கமாக மனிதர்களை வேட்டையாடுவதில்லை. அதே நேரத்தில் எப்போதாவது மனிதர்களை வேட்டையாடி சுவைத்துவிட்டால், அதற்கு அவை அடிமையாகி விடுகின்றன. 'அதன்படியே, இந்த ஓநாய்கள், கிராமங்களுக்குள் புகுந்து மனிதர்களை தாக்கியுள்ளன. குறிப்பாக, சிறு குழந்தைகள் அவற்றின் இலக்காக இருந்துள்ளன' என, தெரிவித்தனர். மீதமுள்ள ஓநாய்களை பிடிப்பதற்கான முயற்சி நடந்து வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
ஆக 30, 2024 05:40

காடு அழிந்து அதிக அளவில் சிறு விலங்குகள் கிடைக்கவில்லை என்றால் ஊருக்குள்தான் ஓநாய்கள் படையெடுக்கும். காடுகளை அழிப்பதை மனிதன் நிறுத்துவதுதான் சுற்றுச்சூழலுக்கு நல்லது.


சமீபத்திய செய்தி