புவனேஸ்வர்: ஒடிஷாவில் 1,396 கோடி ரூபாய் வங்கி மோசடி புகாரில், தொழிலதிபருக்கு சொந்தமான, 10 விலையுயர்ந்த சொகுசு கார்கள், மூன்று சூப்பர் பைக்குகள், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 13 லட்சம் ரூபாய் உள்ளிட்டவற்றை ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடந்த 2009 - 2013 வரையிலான காலக்கட்டத்தில், ஒடிஷாவின் புவனேஸ்வரை தலைமையிடமாக வைத்து செயல்பட்ட 'இந்தியன் டெக்னோமேக் கம்பெனி லிமிடெட்' பெயரில் 'பாங்க் ஆப் இந்தியா'வில் கடன் வாங்கப்பட்டது. அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் இதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. வாங்கிய கடன் தொகை, கூறப்பட்டதை விட வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாக தெரிய வந்தது. அது மட்டுமின்றி, கடன் தொகையானது வேறு சில நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது. ஒடிஷாவின் 'அன்மோல் மைன்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்துக்கு 59.80 கோடி ரூபாய் மாற்றப்பட்டதும், போலீசார் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், 1,396 கோடி ரூபாய் மோசடி நடந்தது வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, இந்த வழக்கு அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டது. கடந்தாண்டு, ஒடிஷாவின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், 310 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில், 'அன்மோல் மைன்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் தலைவரும், தொழிலதிபருமான சக்தி ரஞ்சன் டாஷின் வீடு, அலுவலகங்கள், அவருக்கு சொந்தமான சுரங்க நிறுவனங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். இதில், 'போர்ஷே கெய்ன், மெர்சிடிஸ் பென்ஸ், பி.எம்.டபிள்யு., மினி கூப்பர்' உட்பட பல்வேறு நிறுவனங்களின், 10 உயர் ரக சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப் பட்டன. இது மட்டுமின்றி, மூன்று சூப்பர் பைக்குகள், 1.12 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், 13 லட்சம் ரொக்கம் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மதிப்பு, 8.25 கோடி ரூபாய். சக்தி ரஞ்சன் டாஷ் மற்றும் அவரின் ஊழியர்களிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறுதியில், சக்தி ரஞ்சன் டாஷ் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.