மணிப்பூரில் 10 தீவிரவாதிகள் கைது
இம்பால்: மணிப்பூரில் தடை செய்யப்பட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த, 10 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 2023 மே முதல் கூகி, மெய்டி இனத்தவர் இடையே இட ஒதுக்கீடு தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில், 260 பேர் கொல்லப்பட்டனர். அங்கு தற்போது அமைதி திரும்ப கவர்னர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில், சுராசந்த்பூர் மாவட்ட வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக அசாம் ரைபிள்ஸ் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரைபிள்ஸ் படையினர், 'ஆப்பரேஷன் சாங்கோட்' என்ற சங்கேத பெயரில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, 'ஒருங்கிணைந்த கூகி தேசிய ராணுவம்' என்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பின் கமாண்டர் ஜம் கோகின் குயிட் லுபோவை அவர்கள் கைது செய்தனர். மேலும் ஐந்து பயங்கரவாதிகள் அங்கு சிக்கினர். பிடிபட்ட கமாண்டர் லுபோ, கடந்த ஆண்டு விஷ்ணுப்பூர் மாவட்டத்தில் மெய்டி இனத்தை சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என தெரியவந்துள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் தவுபால் மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களில் நான்கு தீவிரவாதிகள் சிக்கினர்.