புதுடில்லி: பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து முதல் 100 நாட்களில் மட்டும் ஏழு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதுடன், அந்தந்த நாடுகளுடனான நட்புறவையும் வலுப்படுத்தியுள்ளார். மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.. ஜூன் 9ம் தேதி பதவியேற்ற பிரதமர் மோடி, அடுத்த 4வது நாளில் இத்தாலி சென்றார். ஜூன் 13-14ம் தேதிகளில் இத்தாலியின் பசானோ நகரில் நடைபெற்ற ஜி7 அமைப்பின் 50வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அப்போதைய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், அப்போதைய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஷோல்ஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி ஆகியோரும் பங்கேற்றிருந்ததால், அவர்களுடன் சந்தித்து பரஸ்பரம் நட்புறவு பற்றி ஆலோசித்தார்.. ஜூலை 8, 9ம் தேதிகளில் ரஷ்யா தலைநகர் மாஸ்கோ சென்றார் பிரதமர் மோடி. 22வது இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் விடுத்த அழைப்பின்பேரில் பிரதமர் மோடி சென்றிருந்தார். புடினுடன் இருநாட்டு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார். மேலும், ரஷ்ய அரசு சார்பாக அந்நாட்டின் உயரிய விருதான 'ஆர்டர் ஆப் செயிண்ட் அப்போஸ்ஸல்' விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. ரஷ்யாவில் கசான் மற்றும் எகாடெரின்பர்க் நகரங்களில் இரண்டு புதிய இந்திய துணைத் தூதரகங்களைத் திறப்பதாகவும் பிரதமர் மோடி அறிவித்தார். உக்ரைன் உடனான போர் நிறுத்தம் பற்றியும் புடினுடன் ஆலோசித்தார்.. ரஷ்யா பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஜூலை 9ம் தேதி 2 நாள் சுற்றுப்பயணமாக ஆஸ்திரியா சென்றார் பிரதமர் மோடி. அந்நாட்டு அதிபர் அலெக்ஸாண்டர் வான் டெர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெஹாம்மர் உள்ளிட்டோர் வரவேற்றனர். வியன்னாவில் இந்திய வம்சாவளியினர் இடையே பிரதமர் மோடி உரையாற்றினார். சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் ஆஸ்திரியாவுக்கு செல்வது இதுவே முதல் முறை.. ஆகஸ்ட் 21ம் தேதி இரண்டு நாள் அரசு முறை பயணமாக போலாந்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் பிரதமர் மற்றும் அதிபரை சந்தித்து நட்புறவை வலுப்படுத்தினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுடன், வார்சாவில் உள்ள இந்திய வம்சாவளியினர், தொழிலதிபர்களையும் சந்தித்தார். அப்போது இந்தியாவில் வர்த்தகம் செய்வது குறித்தும் ஆலோசித்தார். கடந்த 45 ஆண்டுகளில் போலந்து சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றார்.. அதனை முடித்துக்கொண்டு ஆக.,23, 24ல் உக்ரைன் சென்றார் மோடி. அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். அப்போது ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். கீவ் நகரில் ஹிந்தி கற்கும் உக்ரேனிய மாணவர்களுடன் உரையாடினார். 1991ல் உக்ரைன் சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய பிரதமரின் முதல் பயணமாக இது அமைந்தது.. ஆசியாவின் சிறிய நாடான புருனேவுடனான தூதரக உறவு, 40 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், முதல் இந்தியப் பிரதமராக, நரேந்திர மோடி அங்கு செப்.,3, 4ம் தேதிகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அந்த நாட்டின் சுல்தான் ஹசனல் போல்கியாவுடன், இரு தரப்பு உறவுகள், சர்வதேச பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.. இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்து அங்கிருந்து செப்.,4, 5ல் மற்றொரு ஆசிய நாடான சிங்கப்பூருக்கு சென்றார். இது, பிரதமராக அவருடைய ஐந்தாவது பயணம். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங் அவரை வரவேற்று, தனிப்பட்ட முறையில் விருந்தும் அளித்தார். இரு தலைவர்களும் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது சிங்கப்பூரில் விரைவில் திருவள்ளுவர் பெயரில், முதல் சர்வதேச கலாசார மையம் அமைப்பது பற்றி முடிவெடுக்கப்பட்டது. இரு நாட்டு உறவு குறித்தும் ஆலோசனை நடத்தினார்.