பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 3 பெண்கள் உட்பட 12 பேர் கைது
சண்டிகர் : பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கடந்த இரு வாரங்களில் மட்டும், பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தில் மூன்று பெண்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் சமீபத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, நம் ராணுவம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இதில், பாகிஸ்தான் ராணுவத்துக்கு கடும் சேதம் ஏற்பட்டது. தேடுதல் வேட்டை
இந்நிலையில், நம் நாட்டில் இருந்தபடியே சிலர், பாகிஸ்தானுக்கு உளவு பார்ப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, உளவு வேலையில் ஈடுபட்டுள்ளோருக்கு எதிரான தேடுதல் வேட்டையை, நம் புலனாய்வு அமைப்புகள் தீவிரப்படுத்தி உள்ளன. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த புகாரில், பஞ்சாபில் மட்டும் இரு பெண்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 4ல், அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பலாக்ஷர் மாசிஹ், சூரஜ் மாசிஹ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.தொடர்ந்து, 11ல், மலேர்கோட்லா மாவட்டத்தைச் சேர்ந்த குசாலா, யாமீன் முகமது ஆகிய பெண்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 15ல், சுக்ப்ரீத் சிங், கரன்பிர் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஹரியானாவில் இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 15ல், சோனிபட் மாவட்டத்தில், உ.பி.,யின் கைரானாவைச் சேர்ந்த நவுமன் இலாஹி, 24, என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். பரிந்துரை
அடுத்த நாளே, கைதால் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் தேவேந்தர் சிங், 25, கைது செய்யப்பட்டார். சமீபத்தில், 'யு டியூபர்' ஜோதி மல்ஹோத்ராவையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, நுாஹ் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். இதே போல், உ.பி.,யின் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது:கைது செய்யப்பட்டுள்ள 12 பேரில் பெரும்பாலானோர், டில்லியில் உள்ள பாக்., துாதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் என்பவருடன் நெருக்கமாக பழகி உள்ளனர். அவரது பரிந்துரையின்படி, பாகிஸ்தானுக்கும் சென்று வந்துள்ளனர்; அங்கு சகல வசதிகளை அனுபவித்து உள்ளனர். யு டியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட பலருக்கு பாக்., உளவுத்துறை அதிகாரிகளை, டேனிஷ் அறிமுகப்படுத்தி உள்ளார். உளவு பார்த்த குற்றச்சாட்டில், சமீபத்தில் நம் நாட்டை விட்டு டேனிஷ் வெளியேற்றப்பட்டார். நம் நாட்டின் ராணுவ தகவல்கள், முக்கிய இருப்பிடங்கள், விமானப்படை தளங்கள் உள்ளிட்ட தகவல்களை, பாக்., உளவுத் துறை அதிகாரிகளுக்கு இந்த 12 பேரும் வழங்கி உள்ளனர். நெட்வொர்க்
மேலும், சமூக ஊடகங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பிரசாரமும் செய்துள்ளனர். இதற்கு அவர்கள் பணமும் பெற்றுள்ளனர். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நடந்த மோதலின் போதும், பாக்., உளவுத் துறை அதிகாரிகளுடன் இவர்கள் தொடர்பில் இருந்துள்ளனர். இவர்களின் நிதி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து வருகிறோம். இந்த நெட்வொர்க் குறித்து விசாரித்து வருகிறோம். இதில் சம்பந்தப்பட்டோரை விரைவில் கைது செய்வோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.