12,692 துப்புரவு தொழிலாளர்கள் பெங்களூரில் நியமனம்
பெங்களூரு: ''நகரில் 12,692 துப்புரவு தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமன பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது,'' என பெங்களூரு மாநகராட்சி நிர்வாக பிரிவு கமிஷனர் அவினாஷ் மேனன் ராஜேந்திரன் தெரிவித்தார்.பெங்களூரில் அவர் அளித்த பேட்டி:மண்டல வாரியாக 12,692 துப்புரவு தொழிலாளர்களை தேர்வு செய்து, வரைவு பட்டியல் நடப்பாண்டு அக்டோபர் 9ம் தேதி, மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த மண்டல கமிஷனர்களின் அலுவலகம், திடக்கழிவு பிரிவு உதவி செயல் நிர்வாக பொறியாளர் அலுவலகத்திலும் பட்டியல் வெளியிட்டு கருத்து கோரப்பட்டது.கருத்துகளை கேட்டறிந்து, 12,692 துப்புரவு தொழிலாளர்கள் நியமன பட்டியல், இணையதளத்திலும் வெளியிடப்பட்டது. பணியில் நியமிக்கப்பட்ட துப்புரவு தொழிலாளர்கள், இடைத்தரகர்களின் பேச்சை கேட்டு, மோசம் போகக்கூடாது. இவர்களுக்கு எந்த பிரச்னை, சந்தேகம் இருந்தாலும், நேரடியாக அந்தந்த பகுதிக்கு உட்பட்ட, திடக்கழிவு பிரிவு உதவி செயல் நிர்வாக பொறியாளர் அலுவலகத்துக்கு சென்று, சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.