புதுடில்லி: வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவையொட்டி, டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு தபால் தலை, நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.வங்கக்கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, 'வந்தே மாதரம்' பாடலை, 1875ம் ஆண்டு நவம்பர் 7ல் அட்சய நவமி நாளில் எழுதினார். சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய இந்த பாடல், 'ஆனந்த மடம்' என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த பாடல் எழுதப்பட்டு, 150 ஆண்டு நிறைவடைவதை இசை, கலை நிகழ்ச்சி நடத்தி ஓராண்டு கொண்டாட மத்திய கலாசார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்வானது இன்று (நவ.,07) துவங்கி 2026ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. இன்று துவங்கி நவ.,14 வரையிலும் முதல் கட்டமாகவும், குடியரசு தினத்தையொட்டி 2026 ஜனவரி 19 - 26 வரை இரண்டாம் கட்டமாகவும், 2026 ஆக.,7 - 15 வரை மூன்றாம் கட்டமாகவும், பின் 2026 நவ.,1-7 வரை கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாட வேண்டும் என மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதையொட்டி டில்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு மைதானத்தில் இன்று (நவ.,07) நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்றார். வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு தபால் தலை, நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. பல்வேறு புகழ்பெற்ற தேசிய கலைஞர்களால் பாடப்பட்ட 'வந்தே மாதரம்' தேசியப் பாடலை பிரதமர் மோடி கண்டு மகிழ்ந்தார். எழுச்சி பாடல்
பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: தலைமுறை தலைமுறையாக தேசத்திற்காக எழுச்சி பெற ஊக்கமளித்த வந்தே மாதரம் பாடலின் 150 ஆண்டுகளை நாங்கள் கொண்டாடுகிறோம். வந்தேமாதரம் எனும் மந்திரம் நமது எதிர்காலத்திற்கு தைரியத்தை தருகிறது. இந்தியர்களாகிய நாம் அடைய முடியாத இலக்கு என்று எதுவும் இல்லை. தேசம் நமது தாய், நாம் அதன் குழந்தைகள் என்று நமது வேதங்கள் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளன. தேசம் நமது தாய்
வேத காலத்திலிருந்தே நமது தேசத்தை நாம் வணங்கி வருகிறோம். நாடுகளை புவிசார் அரசியல் அமைப்பாக பார்ப்பவர்களுக்கு ஒரு தேசம், ஒரு தாயாக இருக்க முடியும் என்ற உணர்வு ஆச்சரியமாக இருக்கலாம். பயங்கரவாதத்தைப் பயன்படுத்தி எதிரி நமது பாதுகாப்பையும் கௌரவத்தையும் தாக்கத் துணிந்தபோது, இந்தியாவின் செயல்பாட்டை உலகம் கண்டது. அறிவு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஒரு தேசத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.புதிய உத்வேகம்
வந்தே மாதரம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் குரலாக மாறியது, அது ஒவ்வொரு இந்தியரின் உணர்வுகளையும் வெளிப்படுத்தியது. வந்தே மாதரம் ஒவ்வொரு சகாப்தத்திற்கும் பொருத்தமானது. 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு விழாவை இன்று கொண்டாடுகிறோம். இது நமக்கு புதிய உத்வேகத்தைத் தரும். நாட்டு மக்களுக்கு புதிய ஆற்றலை அளிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.முன்னதாக, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்று நவம்பர் 7ம் தேதி, நம் நாட்டு மக்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக இருக்கும். நம் நாட்டின் தலைமுறையினரை தேசபக்தி உணர்வால் ஊக்கமளிக்கும் வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடுவோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.