நைஜீரியாவில் வெள்ளப்பெருக்கு 151 பேர் பலியான பரிதாபம்
அபுஜா: நைஜீரிய நாட்டில், பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, 151 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் மாயமாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியா, வறட்சி, கனமழை என காலநிலை மாற்றத்தால் அவ்வப்போது கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது.இந்நிலையில், கடந்த சில நாட்களாக அந்த நாட்டில் கனமழை பெய்து வருகிறது. இதில், தலைநகரான அபுஜாவிலிருந்து, 300 கி.மீ. தொலைவில் நைஜர் மாகாணத்தில் உள்ள மோக்வா என்ற நகரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மோக்வா நகரம், நைஜீரியாவின் விவசாய சந்தை என அழைக்கப்படுகிறது. பீன்ஸ், வெங்காயம் உள்ளிட்ட விளைபொருட்கள் மொத்தமாக விற்பனை செய்யப்படும் மிகப்பெரிய சந்தையாக இந்த நகரம் திகழ்கிறது. நேற்று பெய்த கனமழையால், நீர்நிலைகள் நிரம்பி, வெள்ளம் பெருக்கெடுத்து நகரை மூழ்கடித்தது. பல வீடுகள் நீரில் மூழ்கின. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள அணையில் உடைப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகிஉள்ளது. திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 151 பேர் உயிரிழந்ததை, நைஜர் அவசரகால அமைப்பின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் பலர் மாயமாகி இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.வெள்ளக் கட்டுப்பாட்டு பணிகள் காலதாமதமாக நடைபெற்றதே உயிரிழப்புக்கு காரணம் என, பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.