2 அழகான ஏரிகள், கண்ணாடி மாளிகை
கர்நாடகாவின் தாவணகெரேவிலும் பல சுற்றுலா தலங்கள் உள்ளன. குடும்பத்தினர், நண்பர்களுடன் புத்தாண்டை கொண்டாட சூப்பர் இடங்கள் இங்குள்ளன. வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் குவிகின்றனர். சூளகெரே ஏரி
தாவணகெரே, சென்னகிரியில் சூளகெரே ஏரி உள்ளது. இது மிகப்பெரிய ஏரியாகும். மிக அதிகமான பரப்பளவு கொண்டது. கரையில் நின்று சுற்றி பார்த்தால் கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, பசுமையான காட்சிகள் மனதை கொள்ளை கொள்ளும். சிலுசிலுவென உடலை வருடும் குளிர்ந்த காற்று, சலசலவென தண்ணீரின் சத்தம், பறவைகளின் ரீங்காரத்தை ரசித்தபடி, ஏரிக்கரையில் நடப்பது அற்புதமான அனுபவமாக இருக்கும்.தாவணகெரேவின் பிரபலமான சுற்றுலா தலமாக சூளகெரே ஏரி விளங்குகிறது. 'சமீபத்தில் நல்ல மழை பெய்ததால், ஏரி நிரம்பி கண் கொள்ளா காட்சியாக உள்ளது. இந்த அழகை ரசிப்பதற்காக, வெளி மாவட்டங்கள், வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகின்றனர். மணிக்கணக்கில் இங்கு பொழுதை கழித்து விட்டு செல்கின்றனர். கண்ணாடி மாளிகை
தாவணகெரே - ஹரிஹரா தேசிய நெடுஞ்சாலையில், மிகப் பெரிய கண்ணாடி மாளிகை உள்ளது. இதை பார்க்க தினமும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். இது, தேசிய அளவில் பிரசித்தி பெற்றது. கண்ணாடி மாளிகையில் புதிய உலகத்தையே உருவாக்கி உள்ளனர்.மாளிகையின் வடிவமே சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கிறது. அபூர்வமான வெளிநாட்டு பூச்செடிகளும் இங்குள்ளன. குட்டீஸ்களை அழைத்து சென்றால், மிகவும் குஷி அடைவர். கொண்டஜ்ஜி ஏரி
தாவணகெரேவின் கொண்டஜ்ஜி ஏரியும் கூட சிறந்த சுற்றுலா தலமாகும். மிகவும் அழகானது. மிக பெரிய ஏரிகளில் கொண்டஜ்ஜி ஏரியும் ஒன்றாகும். தற்போது ஏரி நிரம்பியுள்ளது. ததும்பும் நீரை பார்த்து ரசிக்க மக்கள், கூட்டம், கூட்டமாக வருகின்றனர்.எந்த சத்தமும் இன்றி, அமைதியான சூழ்நிலையில் கொண்டஜ்ஜி ஏரி அமைந்துள்ளது. சுற்றுலா பயணியரின் சொர்க்கமாகவே திகழ்கிறது. உள்ளூர் மக்கள் தினமும் நடை பயிற்சிக்கு வருகின்றனர். வார இறுதி நாட்களில் இயற்கையை ரசிக்க, வெளி மாவட்டங்களில் இருந்தும், சுற்றுலா பயணியர் வருகின்றனர்.தாவணகெரே, ஹரிஹராவின், தேவரபெளகெரே அணையும், சுற்றுலா பயணியரை கவர்ந்திழுக்கும் இடங்களில் ஒன்றாகும்.அணையில் இருந்து பேரிரைச்சலுடன் தண்ணீர் வெளியேறும் காட்சியை பார்க்க, இரண்டு கண்கள் போதாது. தாவணகெரே மாவட்டத்துக்கு வருவோர், அணையை பார்க்க மறப்பது இல்லை.விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்களில் இளைஞர்கள், இளம் பெண்கள், மாணவர்கள் பெருமளவில் வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட சூப்பர் ஸ்பாட் இதுவாகும்.
எப்படி செல்வது?
தாவணகெரேவில் இருந்து, 7 - 8 கி.மீ., துாரத்தில் கண்ணாடி மாளிகை உள்ளது. சாமனுார் பாலம் அருகில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாகவும், மாளிகைக்கு செல்லலாம். ஹரிஹராவில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ளது.
எப்படி செல்வது?
தாவணகெரேவில் இருந்து 3 கி.மீ., தொலைவில் தேவரபெளகெரே அணை உள்ளது. மலே பென்னுார் வழியாக அணைக்கு வரலாம். சென்னகெரே வழியாகவும் வரலாம். சாமனுார் பாலத்தின் கீழ்ப்பகுதியில் இருந்து, ஆஞ்சநேயர் கோவில் உள்ள சாலையில், நேராக சென்றால் அணையை காணலாம். முக்கிய நகரங்களில் இருந்து, அரசு, தனியார் பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன.
எப்படி செல்வது?
சூளகெரேவுக்கு செல்ல இரண்டு பாதைகள் உள்ளன. ஷிவமொக்காவில் இருந்து, சென்னகிரிக்கு வந்து அங்கிருந்து தாவணகெரே வழியாக சூளகெரேவுக்கு வரலாம். சென்னகிரியில் இருந்து 15 கி.மீ., துாரத்தில் சூளகெரே ஏரி உள்ளது. அனைத்து நகரங்களில் இருந்தும், சென்னகிரிக்கு அரசு, தனியார் பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. - நமது நிருபர் -