இடுக்கி அணையில் அத்துமீறி நுழைந்த 2 பேர் கைது
மூணாறு:இடுக்கி மாவட்டத்திலுள்ள இடுக்கி அணையில் தடை செய்யப்பட்ட பகுதியில் மதுபோதையில் அத்துமீறி நுழைந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.இந்த அணை ஆர்ச் வடிவிலும், அதன் அருகே செருதோணி அணை நேர் வடிவிலும் கட்டப்பட்டுள்ள போதும் தண்ணீர் ஒன்றாக தேங்கும். மின்வாரிய கட்டுப்பாட்டில் உள்ள அணையின் தண்ணீரை கொண்டு 780 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது. அதனால் அணை பலத்த பாதுகாப்பு வளையத்திற்குட்பட்டது என்பதால் கடும் கட்டுப்பாடுகளுடன் அணையை காண சுற்றுலா பயணிகள் அனுமதிப்படுகின்றனர். பாலக்காடு அருகே ஆலந்தூர் காவச்சேரியைச் சேர்ந்த நவுஷாத் 32, அபு 36, உள்ளிட்ட ஐந்து பேர் காரில் நேற்று முன் தினம் அணையை காண வந்தனர். அவர்கள் வழியில் மது அருந்தியுள்ளனர். போதையில் அணையை காணச் சென்ற நவுஷாத், அபு ஆகியோர் தடை செய்யப்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்தனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இருவரையும் எஸ்.ஐ., ராஜேஷ் குமார் கைது செய்தார். தகவல் இல்லை
இது போன்று பாலக்காட்டைச் சேர்ந்த நபர் 2023 ஜூலை 22ல் தடை செய்யப்பட்ட பகுதியில் நுழைந்து ' ஹைமாக்ஸ் லைட் டைமர்', எர்த் வயர் ஆகியவற்றை இணைத்து பூட்டியதுடன், ஷட்டர்களை திறக்க பயன்படுத்தும் இரும்பு வடத்தில் ஒரு வித திரவத்தையும் ஊற்றிச் சென்றார். இதையடுத்து பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக கூறி அணையை காண பயணிகளுக்கு சில நாட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்த நபர் குறித்து தெரியாததால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.