தேடப்பட்ட 2 பேர் சுட்டுப்பிடிப்பு
புதுடில்லி:துப்பாக்கியால் சுட்ட வழக்கில் தேடப்பட்ட இரண்டு பேர், ரோஹிணியில் துப்பாக்கிச் சண்டைகுப் பின் கைது செய்யப்பட்டனர். காயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். புதுடில்லி சாவ்லாவில், 28ம் தேதி துப்பாக்கியால் சுட்ட வழக்கில், ஹரியானா மாநிலம் அம்பாலா கன்டோன்மென்ட்டைச் சேர்ந்த ஹர்ஷ்தீப், 20, பானிபட்டைச் சேர்ந்த நவீன், 24, ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், புதுடில்லி ரோஹிணி 28வது செக்டாரில் இருவரும் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு இருவரையும் போலீசார் சுற்றிவளைத்தனர். ஆனால், இருவரும் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் கொடுத்த பதிலடியில் இருவரும் காலில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.