தஹாவூர் ராணாவிடம் டில்லியில் விசாரிக்க முடிவு!
புதுடில்லி: மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட உள்ள பயங்கரவாதி தஹாவூர் ராணாவிடம் டில்லியில் விசாரணை நடத்தப்பட உள்ளது.மஹாராஷ்டிராவின் மும்பையில் 2008 நவ., 26ல், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 166 பேர் உயிரிழந்தனர்; பலர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு, பாக்., வம்சாவளியைச் சேர்ந்த கனடா தொழிலதிபர் தஹாவூர் ராணா, மூளையாகச் செயல்பட்டது தெரியவந்தது. அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்ட அவன், அந்த நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.அவனை நாடு கடத்தும் படி, அமெரிக்காவிடம் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதற்கு எதிராக தஹாவூர் ராணா தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் நீதிமன்றங்களினால் தள்ளுபடி செய்யப்பட்டன.சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் டிரம்ப்பை சந்தித்தார். அப்போது, தஹாவூர் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்த டிரம்ப் ஒப்புதல் அளித்து உள்ளார்.இந்நிலையில், அவனிடம் டில்லியில் வைத்து விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பு(என்.ஐ.ஏ.,) முடிவு செய்துள்ளது.