உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  தலைக்கு ரூ.15 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட 3 நக்சல்கள் சுட்டுக்கொலை

 தலைக்கு ரூ.15 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட 3 நக்சல்கள் சுட்டுக்கொலை

சுக்மா: சத்தீஸ்கரில் துப்பாக்கி சுடும் நிபுணர் உட்பட 15 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நக்சல்களை, பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். நாட்டில் அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் நக்சல்களை முற்றிலும் அழிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக சத்தீஸ்கரின் சுக்மா, மஹாராஷ்டிராவின் கட்சிரோலி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினர் அதிரடி வேட்டை நடத்தி, நக்சல்களை அழித்து வருகின்றனர். சத்தீஸ்கரில் இந்த ஆண்டு மட்டும் 262 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில், 233 நக்சல்கள் பஸ்தார் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பெஜ்ஜி மற்றும் சின்டா குபா பகுதியை சேர்ந்த துமல்பாத் கிராமத்தையொட்டிய மலைப்பகுதி மற்றும் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட ரிசர்வ் போலீசார் நேற்று காலை அங்கு விரைந்து சென்று நக்சல் தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள், போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீசாரும் துப்பாக்கியால் சுட்டதில், மூன்று நக்சல்கள் உயிரிழந்தனர். இதில் ஒருவர் துப்பாக்கி சுடும் நிபுணர் மத்வி தேவா, மற்ற இரு பெண்கள் பொடியம் கங்கி, சோதி கங்கி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் தேவா, கோன்டா ஏரியா கமிட்டி உறுப்பினர் என்பதும் இவர் மீது பொதுமக்கள் பலரை கொலை செய்ததாகவும் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், இவரை பிடித்து தரும் நபருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. கொல்லப்பட்ட பெண் நக்சலான பொடியம் கங்கி நக்சல் கலாசார அமைப்பான செட்னா நாட்டிய மண்டலியின் தளபதி என்பதும் மற்றொரு பெண்ணான சோதி கங்கி, கிஷ்தாராம் ஏரியா கமிட்டி உறுப்பினர் என தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரது தலைக்கும் தலா 5 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நக்சல்கள் தேடுதல் வேட்டை நடப்பதாக சுக்மா எஸ்.பி., கிரண் சவான் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை