தொழிலதிபரிடம் பணம் பறிப்பு ஏ.எஸ்.ஐ., உட்பட 3 பேர் கைது
ஜெயநகர்: தொழிலதிபரை மிரட்டி 15 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில், ஏ.எஸ்.ஐ., உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பெங்களூரு ஜெயநகரின் 5வது பிளாக்கில் வசிப்பவர் கணேஷ். தொழிலதிபர். கடந்த 5ம் தேதி மதியம் தன் உறவினர்களான அலோக், ரேணுவிடம் இருந்து 15 லட்சம் ரூபாயை வாங்கிக் கொண்டு, காரில் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.அவரது காரை வழிமறித்த இருவர், தங்களை போலீஸ் என்று கூறிக் கொண்டனர். போலீஸ் சீருடை அணிந்திருக்கும் அடையாள அட்டையை காட்டினர். 'உங்கள் காரில் கஞ்சா கடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது' என்று கூறி அவர்கள் சோதனை நடத்தினர். ஆனால் கஞ்சா சிக்கவில்லை.ஆனாலும், 'கஞ்சா கடத்தியதாக பொய் வழக்குப்பதிவு செய்வோம்' என்று கணேஷை மிரட்டி, 15 லட்சம் ரூபாயை பறித்துச் சென்றனர். கணேஷ் அளித்த புகாரில் ஜெயநகர் போலீசார் விசாரித்தனர்.விசாரணையில் கணேஷிடம் பணம் பறித்தது, சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவில் பணியாற்றி வரும் ஏ.எஸ்.ஐ., யதீஷ், ஏட்டு சாஹிர் அகமது ஆகியோர் என்பது தெரிந்தது. நேற்று முன்தினம் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஆட்டோவில் தப்பிச் செல்ல உதவிய டிரைவர் சமீர் என்பவரும் கைது செய்யப்பட்டார்.இதற்கு முன்பும் குற்ற வழக்கில் கைதான யதீஷ், ஆறு மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.