இந்துார்: மத்திய பிரதேசத்தில், இந்துார் - -தேவாஸ் நெடுஞ்சாலையில், 30 மணி நேரம் நீடித்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர்.ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு இந்துார் மாவட்டத்தில் உள்ள இந்துார் - தேவாஸ் நெடுஞ்சாலையில் கடந்த சில நாட்களாக கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், சமீபத்தில் பெய்த பலத்த மழையால் அந்த நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது.கடந்த 26ம் தேதி மாலை, இந்துார் - தேவாஸ் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனால், வாகனங்கள் நகர முடியாமல் ஒரே இடத்தில் அணிவகுத்து நின்றன. இந்த போக்குவரத்து நெரிசல், 27ம் தேதி இரவு வரை நீடித்தது. அதாவது, அந்த குறிப்பிட்ட நெடுஞ்சாலையில் மட்டும், 30 மணி நேர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில், 4,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கித் தவித்தன. அருகிலுள்ள கிராமங்கள் வழியாக மாற்று வழிகள் இல்லாததும், போக்குவரத்து நெரிசலை மேலும் மோசமாக்கியது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி, சந்தீப் படேல், 32, கமல் பஞ்சல், 62, பல்ராம் படேல், 55, ஆகியோர் உயிரிழந்தனர். தகவலறிந்த இந்துார் மாவட்ட கலெக்டர் ஆஷேஷ் சிங், போக்குவரத்தை சீர்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.