கார் - சரக்கு வாகனம் மோதல் தம்பதி-, மகன் உட்பட 4 பேர் பலி
கலபுரகி: கலபுரகி அருகே காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் தம்பதி, மகன் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.கலபுரகி மாவட்டம், கமலாப்பூர் அருகே மருகுடி கிராஸ் பகுதியில் நேற்று காலையில், தெலுங்கானா பதிவு எண் கொண்ட கார் சென்று கொண்டிருந்தது.கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே வந்த சரக்கு வாகனமும், காரும் நேருக்கு நேர் பயங்கர வேகத்தில் மோதிக் கொண்டன.விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், கமலாப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் கார், சரக்கு வாகனத்தில் இருந்தவர்களை மீட்க முயன்றனர்.சரக்கு வாகனத்தின் டிரைவர், படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காரில் இருந்த நான்கு பேரையும் சடலமாகவே மீட்க முடிந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் ஹைதராபாதைச் சேர்ந்த பார்கவ் கிருஷ்ணா, 55, அவரது மனைவி சங்கீதா, 45, மகன் ராகவன், 28, என்பது தெரிந்தது. உயிரிழந்த கார் டிரைவரின் பற்றிய விபரம் தெரியவில்லை.தம்பதியும், மகனும் ஹைதராபாத்தில் இருந்து, கலபுரகி கங்காபூரில் உள்ள தத்தாத்ரேயா கோவிலுக்குச் சென்றதும், விபத்தில் சிக்கி உயிரிழந்ததும் தெரிந்தது.