UPDATED : ஜூலை 22, 2025 06:08 PM | ADDED : ஜூலை 22, 2025 04:04 PM
திருவனந்தபுரம்: கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்பு, தனது 20 வயதில், கேரள மாநில தடகள போட்டியில் பி.டி.உஷா படைத்த சாதனை இன்றும் முறியடிக்கப்படாமல் உள்ளது.இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி உஷா, 61, இருக்கிறார். இவர் தடகள வீராங்கனை ஆவர். பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி அசத்தி உள்ளார். இந்தியா சார்பில் ஆசியப்போட்டிகளில் தங்கம் வென்றவர். ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்றவர்.கடந்த 41 ஆண்டுக்கு முன், அவரது 20 வயதில் கேரளாவில் மாநில அளவில் பெண்களுக்கான 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தங்களில் பி.டி.உஷா சாதனை படைத்தார். அதாவது, 1984ம் ஆண்டில், 100 மீட்டரை 11.40 வினாடிகளிலும், 400 மீட்டரை 52.70 வினாடிகளும் கடந்து சாதனை படைத்து இருந்து இருந்தார். இந்த சாதனையை முந்தி செல்ல கொல்லத்தைச் சேர்ந்த 20 வயதான ஆர்த்ரா முயற்சி செய்தார். ஆனால் அவரால் பி.டி.உஷாவின் சாதனையை முறியடிக்க முடியவில்லை. 20 வயதான ஆர்த்ரா, 100 மீட்டரை 11.87 வினாடிகளில் கடந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன், 100 மீட்டரை 11.84 வினாடிகளில் கடந்த ஓட்டப்பந்தய வீரரான ஷில்பி, இந்த முறை, 12.10 வினாடிகளில் கடந்தார். இடுக்கியின் ஆர்த்தி 12.09 வினாடிகளில் கடந்து, 3வது இடத்தைப் பிடித்தார்.400 மீட்டர் ஓட்டத்தில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கவுரி நந்தனா 54.57 வினாடிகளில் ஓடி முதலிடத்தைப் பிடித்தார். ஆனாலும், 41 ஆண்டுக்கு முன், அதாவது 20 வயதில், பி.டி. உஷா நிர்ணயித்த இலக்கை, திருவனந்தபுரத்தில் நடந்த 69வது மாநில சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் யாரும் முறியடிக்கவில்லை என்று கேரள விளையாட்டுத்துறையினர் கூறி வருகின்றனர்.