சபரிமலையில் 5 ஏ.டி.எம்., கவுன்டர்கள் ஆன்லைன் பணபரிமாற்ற வசதி
சபரிமலை:சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக 5 ஏ.டி.எம்.,கள் செயல்படுகின்றன. சன்னிதானத்தில் பிரசாதம் வாங்க ஆன்லைன் பண பரிமாற்றத்திற்கு தனி கவுன்டர்கள் உள்ளன.சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள் வசதிக்காக பெரிய நடை பந்தலில் 18 படிகளுக்கு ஏறி செல்லும் பாதைக்கு நேர் எதிரில் தனலட்சுமி மற்றும் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.,கள் உள்ளன. இதுபோல கோயிலின் பின்புறம் தனலட்சுமி வங்கியுடன் சேர்ந்து ஒரு ஏ.டி.எம்., செயல்படுகிறது. பம்பையில் கணபதி கோயில் ஆடிட்டோரியம் அருகே ஸ்டேட் வங்கி, தனலட்சுமி வங்கி ஏ.டி.எம்.கள் செயல்படுகின்றன.18 படிகளின் வலது பக்கம் செயல்படும் முக்கிய பிரசாத மண்டபத்தில் 11 கவுன்டர்கள் செயல்படுகின்றன. இதில் ஒன்றாம் எண் கவுன்டர் ஆன்லைனில் பணம் செலுத்தி முன்பதிவு செய்தவர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். 2, 3, 4, ஆகிய கவுன்டர்களில் பணம் மட்டுமே கொடுத்து பிரசாதம் பெற முடியும். 5 முதல் 11 வரை உள்ள கவுன்டர்களில் அனைத்து வகை கார்டுகளும் பயன்படுத்தி பிரசாதம் வாங்கலாம். மளிகைப்புறம் கோயில் அருகே உள்ள பிரசாத கவுன்டர்களில் பணம், கூகுள்பே, அனைத்து வகை கார்டுகளை பயன்படுத்தி பக்தர்கள் பிரசாதம் பெற முடியும்.விபூதி, குங்குமம், நெய் போன்ற பிரசாதங்கள் வாங்கவும், நெய்யபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகளுக்கு டிக்கெட் எடுக்கவும் பணம் மட்டுமே செலுத்த முடியும்.சபரிமலையில் மிக அதிக கட்டணம் கொண்ட படி பூஜை வழிபாடு முன்பதிவு 2039 ஏப்ரல் வரை முடிந்துள்ளது. இதற்கான கட்டணம் ரூ.ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 900.மற்றொரு முக்கிய வழிபாடு சகஸ்ர கலச பூஜை 2032 வரை முன்பதிவு முடிந்துள்ளது. இதற்கான கட்டணம் ரூ.92 ஆயிரத்து 250. எல்லா மாத பூஜைக்கும் நடை திறக்கும் போது ஐந்தாவது நாள் இப்பூஜை நடக்கும். ரூ.61 ஆயிரத்து 800 கட்டணம் கொண்ட உதயாஸ்தமன பூஜை 2030 வரை முன்பதிவு முடிவடைந்துள்ளது.