இடஒதுக்கீடு விவகாரம்: 5 கோடி மராத்தாக்கள் அணி திரள்வர் மஹா., அரசுக்கு சமூக ஆர்வலர் எச்சரிக்கை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
மும்பை: 'மராத்தா சமூகத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கைக்கு மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் செவி சாய்க்காவிட்டால், 5 கோடி மராத்தாக்கள் மும்பையில் அணி திரள்வர்' என, சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே எச்சரித்துள்ளார். 'மஹாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினரை ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும், அரசு வேலைகள் மற்றும் கல்வியில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்' எனக் கோரி, சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியுள்ளார். தெற்கு மும்பையின் ஆசாத் மைதானத்தில் நான்காவது நாளாக அவர் நடத்தி வரும் போராட்டம் காரணமாக, மஹாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஜராங்கே நேற்று கூறியதாவது: மராத்தா சமூகத்துக்கு இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை, அரசு மிக எளிதாக எடுக்கலாம். நிஜாம் ஆட்சி காலத்தில் ஹைதராபாத், சதாரா அரசிதழ்களில் மராத்தா சமூகத்தினருக்கு குன்பி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதை உதாரணமாக கொண்டு, மஹாராஷ்டிராவில் உள்ள அனைத்து மராத்தாக்களும் குன்பிகள் தான் என அரசு எளிதாக பிரகடனப்படுத்தலாம். மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தாசில்தார்கள் மூலம், அதற்கான ஜாதி சான்றிதழ்களையும் வினியோகிக்க உத்தரவிடலாம். ஆனால், அதை அரசு செய்ய தயங்குகிறது. மும்பைக்கு வர, மராத்தா மக்கள் சரியான நேரத்துக்காக காத்திருக்கின்றனர். முதல்வர் பட்னவிஸ் மராத்தா சமூகத்தின் கோரிக்கைக்கு செவி சாய்க்காவிட்டால், 5 கோடிக்கும் மேற்பட்ட மராத்தாக்கள் மும்பையில் அணி திரள்வர். இவ்வாறு அவர் கூறினார். ஆசாத் மைதானம் மட்டுமின்றி, அதை சுற்றியுள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் என பல்வேறு பகுதிகளை ஜராங்கேவின் ஆதரவாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், தெற்கு மும்பை போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துள்ளது. வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்படுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது.
ஜராங்கேவுக்கு ஐகோர்ட் கெடு
மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் காரணமாக, ஒட்டுமொத்த நகரமும் ஸ்தம்பித்துள்ளதாக மும்பை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு: போராட அனுமதித்த மைதானத்தை கடந்து, அனைத்து தெருக்களையும் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. போராட்டம் அமைதியாக நடப்பது போலவும் தெரியவில்லை. எனவே இன்று மதியத்திற்குள் போராட்டக்காரர்கள் மும்பை தெருக்களை காலி செய்ய வேண்டும். மேற்கொண்டு கூடுதலாக போராட்டக்காரர்கள் மும்பையில் குவியக் கூடாது. அவர்களை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
அரசு தயங்குவது ஏன்?
மஹாராஷ்டிராவில், மராத்தா சமூகத்தினர், 28 சதவீதமாக உள்ளனர். இவர்களுக்கு, சமூக மற்றும் கல்வி அடிப்படையிலான பின் தங்கிய வகுப்பினர் சட்டப்படி, 10 சதவீத இட ஒதுக்கீடு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. மஹாராஷ்டிராவில், இடஒதுக்கீட்டுக்கான 50 சதவீத உச்சவரம்பு ஏற்கனவே 62 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டை அடுத்து அது, 72 சதவீதமாக உயர்ந்தது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. என வே மராத்தாக்களுக்கு அரசு வழங்கிய 10 சதவீத இடஒதுக்கீடு அமலுக்கு வரவில்லை.
யார் இந்த குன்பிக்கள்?
மஹாராஷ்டிராவில் வசிக்கும் மராத்தாக்கள் வரலாற்று ரீதியாக சிப்பாய்கள், அமைச்சர்கள், நிலச்சுவான்தாரர்கள் மற்றும் விவசாயிகளாக இருந்தவர்கள். அம்மாநில அரசியலை தீர்மானிப்பதில் மராத்தா சமூகம் முக்கிய இடம் பிடித்து வருகிறது. இந்த மராத்தா சமூகத்தின் துணை ஜாதி பிரிவு தான் குன்பிக்கள். சமூக, பொருளாதார அந்தஸ்தில் குறைவாக இருந்ததால், இந்த குன்பிக்கள் ஓ.பி.சி., பிரிவில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், மராத்தா சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினரையும் குன்பிக்களாக சேர்க்க வேண்டும் என்பதே ஜராங்கேவின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.