உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய உத்தரவு

50 சதவீத அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய உத்தரவு

புதுடில்லி,டில்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருவதை அடுத்து, அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது.டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு ஆண்டுதோறும் காற்று மாசு பிரச்னை தொடர்கதையாக உள்ளது. இதுவரை இல்லாத வகையில் இந்தாண்டு காற்று மாசு அதிகமாக உள்ளது. இதனால், குழந்தைகள், முதியவர்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து, பள்ளிகளை மூட உத்தரவிட்ட டில்லி அரசு, கட்டுமானப் பணி, கனரக வாகனங்களை இயக்குவதற்கு தடை விதித்துள்ளது.டில்லியில் நேற்று காலை, காற்றின் தரக் குறியீடு, 422 ஆக இருந்தது. இது, 400க்கு மேல் சென்றால், ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்களுக்கும் சுவாசக்கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த டில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், 'டில்லியில் காற்று மாசு அதிகரித்தபடியே உள்ளது.'இதை குறைக்கும் பொருட்டு, அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்படுகின்றனர்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.இதற்கிடையே, காற்று மாசு காரணமாக, டில்லி அரசு அலுவலகங்கள் மற்றும் டில்லி மாநகராட்சி அலுவலகங்கள் செயல்படும் நேரத்தை மாற்றி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, டில்லி அரசு அலுவலகங்கள், காலை 10:00 - 6:30 மணி வரையும்; டில்லி மாநகராட்சி அலுவலகங்கள், காலை 8:30 - மாலை 5:00 மணி வரையும் இயங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை, 2025 பிப்., 28 வரை அமலில் இருக்கும்.

தீவிரத்தை உணராமல்

பட்டாசு வெடிப்புஹரியானாவின் குருகிராமில், கடந்த சில நாட்களாக காற்றின் தரக்குறியீடு, 400க்கு மேல் உள்ளது. எங்கு பார்த்தாலும் புகை மூட்டமாகவே காணப்படுகிறது. நிலைமை இப்படி இருக்கையில், ஆபத்தை உணராமல், திருமண நிகழ்ச்சி ஒன்றில், பட்டாசு வெடித்து பொது மக்கள் கொண்டாடியது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஏற்கனவே காற்று மாசால் அவதிப்படுகிற நிலையில், பட்டாசு தேவைதானா? என, பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை