பயிற்சி டாக்டர்களுக்கு ஆதரவாக 50 சீனியர் டாக்டர்கள் ராஜினாமா
கோல்கட்டா, மேற்கு வங்கத்தில், பெண் டாக்டர் மரணத்துக்கு நீதி கேட்டு, பயிற்சி டாக்டர்கள் நடத்தி வரும் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக, ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரியின், 50 சீனியர் டாக்டர்கள் நேற்று ராஜினாமா செய்தனர்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரியில், 31 வயதான பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். பாதுகாப்பு
இது தொடர்பாக, போலீஸ் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கேட்டும், பாதுகாப்பு வழங்கக் கோரியும் ஒரு மாதத்துக்கும் மேல், மாநிலம் முழுதும் பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தினர். முதல்வர் மம்தா பானர்ஜியுடன் ஐந்தாவது முறையாக, நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, செப்., 21ல் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.பெண் டாக்டரின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்; சுகாதாரத் துறை செயலர் என்.எஸ்.நிகாமை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.மருத்துவமனைகளில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 4ம் தேதி முதல், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் பயிற்சி டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் நான்காவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. பயிற்சி டாக்டர்களுக்கு ஆதரவாக, 15 சீனியர் டாக்டர்களும் போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். இந்நிலையில், பயிற்சி டாக்டர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரியின், 50 சீனியர் டாக்டர்கள் நேற்று ராஜினாமா செய்தனர். துர்கா பூஜை
இதேபோல், என்.ஆர்.எஸ்., மருத்துவக் கல்லுாரியின் டாக்டர்களும் விரைவில் ராஜினாமா செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.துர்கா பூஜை பண்டிகை துவங்கியுள்ள நிலையில், பயிற்சி டாக்டர்களின் போராட்டம், சீனியர் டாக்டர்களின் ராஜினாமா போன்றவை, திரிணமுல் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, 'போராட்டத்தைக் கைவிட்டு பயிற்சி டாக்டர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்' என, தலைமைச் செயலர் மனோஜ் பந்த் வலியுறுத்தினார்.