நடத்தை விதிமுறை மீறிய 577 வழக்குகள் பதிவு
புதுடில்லி:தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 577 வழக்குகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.டில்லி சட்டசபைத் தேர்தல் பிப்.,5ம் தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 7ம் தேதி வெளியிடப்பட்டது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. நேற்று முன் தினம் வரை 577க்கும் மேற்பட்டோர் மீது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கலால் சட்டப்படி 19,065 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 284 சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் 394 துப்பாக்கிக் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அதேபோல, 1.3 கோடி ரூபாய் மதிப்புள்ள 46,682 லிட்டர் மதுபானம், 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 119.51 கிலோ போதைப்பொருள், 1,200க்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட ஊசி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மேலும், 5.29 கோடி ரூபாய் பணம் மற்றும் 37.39 கிலோ வெள்ளிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.