கர்நாடகாவில் தமிழர் உட்பட 6 நக்சல் சரண்
பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா முன்னிலையில், ஆறு நக்சல்கள் நேற்று சரணடைந்தனர். இவர்களில், வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரும் ஒருவர்.கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சிக்கமகளூரு, குடகு, உடுப்பி, ஷிவமொக்கா ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இப்பகுதியில் நக்சல் கும்பல் செயல்பட்டு வந்தது.நக்சல் அமைப்பின் தலைவராக, உடுப்பி, கார்கலா பகுதியைச் சேர்ந்த விக்ரம் கவுடா செயல்பட்டு வந்தார். கடந்த டிசம்பர் மாதம் விக்ரம் கவுடாவை, நக்சல் ஒழிப்பு படையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். அவருடன் இருந்த சில நக்சல்கள் வனப்பகுதிக்குள் தப்பி சென்றனர். தப்பி சென்ற நக்சல்கள் சரணடைந்தால், அவர்கள் மறுவாழ்வுக்கு உதவி செய்வதாக அரசு அறிவித்து இருந்தது.இரண்டு நாட்களுக்கு முன், அரசு சார்பில் முற்போக்கு சிந்தனையாளர்கள், முன்னாள் நக்சல் குழுவினர் வனப் பகுதிக்குள் சென்று, ஆறு நக்சல்களிடம் பேச்சு நடத்தினர்.பேச்சில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, ஆறு நச்சல்களும் சரணடைய ஒப்புக்கொண்டனர். இதன்படி, நேற்று இரவு 7:15 மணிக்கு, பெங்களூரில் உள்ள முதல்வரின் அலுவலகமான கிருஷ்ணா இல்லத்தில், சித்தராமையா முன்னிலையில் ஆறு நக்சல்களும் சரண் அடைந்தனர். தமிழர்
சிருங்கேரி - முண்டகாரு லதா, கலசா - வனஜாக் ஷி, ராய்ச்சூர் - ஜெயண்ணா, தட்சிண கன்னடா - சுந்தரி, கேரளா - ஸ்ரீஜா, தமிழகம் - வசந்த் ஆகிய ஆறு நக்சல்கள் சரண் அடைந்தனர். அவர்களை பாராட்டிய முதல்வர், 'உங்களது மறுவாழ்வுக்கு அரசு உதவி செய்யும்' என்று உறுதி அளித்தார். அவர்களுக்கு சிறப்பு நிதியுதவியும் அளிக்கப்பட்டுள்ளது.இவர்களில் வசந்த், வேலுார் மாவட்டம், ஆற்காடைச் சேர்ந்தவர்; பி.டெக்., பட்டதாரி. 2010ல் நக்சல் அமைப்பில் இணைந்தார். கேரளா, கர்நாடக அரசுக்கு எதிரான போராட்டங்களில் அதிகம் பங்கேற்றவர்.