| ADDED : அக் 26, 2024 02:31 PM
மும்பை: பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் வீடியோ பேட்டி வெளியானது தொடர்பாக, அவனது கஸ்டடிக்கு பொறுப்பான பஞ்சாப் போலீஸ் டி.எஸ்.பி., உட்பட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இது குறித்து உயர் மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.மும்பையில் கடந்த அக்.,12ம் தேதி இரவு மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவருமான பாபா சித்திக் 3 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் தான் கொலைக்கு காரணம் என போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் தெரிய வந்தது.பிஷ்னோய் கூலிப்படை அட்டூழியம் மும்பையில் தாங்க முடியவில்லை. புனேவில் பிரபல நகை வியாபாரி ஒருவருக்கு பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் மிரட்டல் விடுத்தனர். நடிகர் சல்மான் கானுக்கு பிஷ்னோய் கும்பல் மிரட்டல் விடுத்தது. இப்படி வார்த்தையால் சொல்ல முடியாத அளவுக்கு, ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் கும்பல் அட்டூழியங்கள் தொடர்கின்றன. இந்த சூழலில், ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் வீடியோ பேட்டி ஒன்று டிவியில் வெளியானது.இந்த வீடியோ சமூகவலைதளத்தில் பரபரப்பை கிளப்பியது. இந்த பேட்டி, லாரன்ஸ் பிஷ்னோய், முன்பு பஞ்சாப் போலீஸ் தனிப்படையிடம் விசாரணைக் கைதியாக இருந்தபோது எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அப்போது அவனது கஸ்டடிக்கு பொறுப்பாக இருந்த பஞ்சாப் போலீஸ் டி.எஸ்.பி., உட்பட 7 பேரை சஸ்பெண்ட் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து உயர் மட்ட விசாரணைக்கும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.