உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /   நந்தினி பெயரில் தயாரிக்கப்பட்ட 8,000 லிட்டர்... கலப்பட நெய் !: திருப்பூரில் செயல்பட்டு வந்த போலி ஆலை: 4 பேர் அதிரடி கைது

  நந்தினி பெயரில் தயாரிக்கப்பட்ட 8,000 லிட்டர்... கலப்பட நெய் !: திருப்பூரில் செயல்பட்டு வந்த போலி ஆலை: 4 பேர் அதிரடி கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: தமிழகத்தின் திருப்பூரில் செயல்பட்டு வந்த போலி நெய் ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு கர்நாடக அரசின் தயாரிப்பான, 'நந்தினி' பெயரில் தயாரிக்கப்பட்ட 8,136 லிட்டர் கலப்பட நெய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கே.எம்.எப்., வினியோகஸ்தர் உட்பட, 4 பேர் கைது செய்யப்பட்டனர். கர்நாடக அரசின் கே.எம்.எப்., எனப்படும், கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பில் தயாரிக்கப்படும் பால் பொருட்கள், 'நந்தினி' என்ற பெயரில் நாடு முழுதும் பல மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், 'நந்தினி' பெயரில் போலியான மற்றும் கலப்பட நெய் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக கே.எம்.எப்., ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக விசாரணை துவங்கியது. அப்போது, பெங்களூரு சாம்ராஜ்பேட், நஞ்சம்பா அக்ரஹாராவில் உள்ள ஒரு குடோனில், போலியான கலப்பட நெய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அப்படையினருக்கு தகவல் கிடைத்தது. கே.எம்.எப்., ஊழல் தடுப்பு பிரிவினர் நேற்று முன்தினம் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். குடோனில் அட்டை பெட்டிகளில், 'நந்தினி' பெயரில் இருந்த, 8,136 லிட்டர் கலப்பட நெய், நான்கு வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த குடோன் சாம்ராஜ்பேட்டையை சேர்ந்த மகேந்திரா என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் நேற்று அளித்த பேட்டி: கே.எம்.எப்., வினியோகஸ்தரான மகேந்திரா, கே.எம்.எப்.,பில் இருந்து அசல் நெய் வாங்கி, திருப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு போலியான நெய் தயாரிக்க ஆலையை நடத்தி வந்துள்ளனர். அங்கு அசல் நெய்யுடன் டால்டா, பாமாயில், தேங்காய் எண்ணெய் கலந்து உள்ளனர். ஐந்து லிட்டர் நெய் பாக்கெட் என்றால், அதில் ஒரு லிட்டர் நெய் தான் உண்மையானது. மற்ற நான்கு லிட்டரும் கலப்படமானது. கே.எம்.எப்., வினியோகஸ்தர் என்பதால், நெய் பாக்கெட், அதை கடைகளுக்கு அனுப்பும் அட்டை பெட்டிகள் மீது என்னென்ன எழுதப்பட்டு இருக்கும் என்பது மகேந்திராவுக்கு நன்கு தெரிந்துள்ளது. நந்தினி பெயரில் நெய் பாக்கெட்டுகள், அட்டைகளை தயாரித்துள்ளார். திருப்பூரில் கலப்பட நெய் தயாரித்து, அங்கிருந்து வேன்களில் பெங்களூரு கொண்டு வந்துள்ளனர். இங்குள்ள கடைகளில் விற்று அதிக லாபம் ஈட்டி உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கலப்பட நெய் தயாரித்துள்ளனர். கலப்பட நெய் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், தேங்காய் எண்ணெய், டால்டா, பாமாயில் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ஒரு கோடியே, 26 லட்சத்து, 95,200 ரூபாய். கலப்பட நெய் தயாரித்ததாக மகேந்திரா, அவரது மகன் தீபக், கலப்பட நெய்யை கடைகளுக்கு விற்ற முனிராஜ், வேன் டிரைவர் அபி அர்ஸ் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பிரேம்ஜி
நவ 16, 2025 19:40

எதுக்கு தான் இப்படிபட்ட கலப்பட மனிதர்கள் பிறக்கிறார்களோ? பிறப்பே கலப்படமோ? இந்த நாட்டில் அதிகாரிகள், தலைவர்கள், மக்கள் எல்லோரும் பிச்சைக்காரர்கள்! வருத்தமாக இருக்கிறது!


vbs manian
நவ 16, 2025 12:12

இறைவன் பணியில் மோசடி செய்பவருக்கு நரகம் நிச்சயம். இப்போதே.


Natchimuthu Chithiraisamy
நவ 16, 2025 10:25

உள்ளூர் காரர்கள் உறங்குகிறார்களா ? திருப்பூர் உறவுகள் கவனம் செலுத்துங்கள் பார்வையிடுங்கள்


முருகன்
நவ 16, 2025 08:06

உணவு பொருட்களில் கலப்படம் செய்யும் மனிதர்களை தண்டிக்க தனி சட்டத்தை திருத்த வேண்டும்


ராஜ்
நவ 16, 2025 08:03

திருப்பதிகக்கே அல்வா கொடுத்த திராவிட மாநிலம் ஆச்சே இதெல்லாம் ஜூஜூபி


Ramesh Sargam
நவ 16, 2025 06:58

திருட்டு வோட்டு, திருட்டு வோட்டு என்று காலத்தை உருட்டும் திமுகவினர், அவர்கள் ஆட்சியில் இப்படி போலி நெய் கர்நாடக அரசு தயாரிப்பான நந்தினி பெயரில் வருவதை தடுத்து நிறுத்த வக்கில்லை.


Kasimani Baskaran
நவ 16, 2025 06:57

"ஐந்து லிட்டர் நெய் பாக்கெட் என்றால், அதில் ஒரு லிட்டர் நெய் தான் உண்மையானது" - கலப்படத்துக்கே கலப்படம் செய்வது என்பது இதுதான்.


Vasan
நவ 16, 2025 06:46

கவிஞர்கள், புலவர்கள் புனைபெயரில் பாடல் எழுதுவது, கவிதை தயாரிப்பது போல் இவரும் நந்தினி என்னும் புனைபெயரில் நெய் தயாரித்து விட்டாரோ என்னவோ?


D.Ambujavalli
நவ 16, 2025 06:15

நெய் சம்பந்தமே இல்லாத ‘நெய் ‘ தயாரிக்க வித்தை திருப்பதி வரை கொட்டி முழங்கிய திண்டுக்கல்லுக்கு நிகராக இவர்களால் முடியுமா?


முக்கிய வீடியோ