சிறை கண்காணிப்பாளருக்கு மிரட்டல் விடுத்த 9 கைதிகள்
கலபுரகி: கலபுரகி சிறை கண்காணிப்பாளர் அனிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, இரண்டு பெண்கள் உட்பட ஒன்பது கைதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கலபுரகி மத்திய சிறையில், தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 300க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் சட்டவிரோத சம்பவங்கள் நடப்பதாக அடிக்கடி புகார்கள் வந்தன. சிறை ஊழியர்கள், கைதிகளிடம் பணம் வாங்கி கொண்டு கஞ்சா பயன்படுத்த அனுமதி வழங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.கடந்த ஏழு மாதங்களுக்கு முன், கலபுரகி சிறையில் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட அனிதா, சிறைக்குள் கஞ்சா வருவதை தடுக்க பல நடவடிக்கைகள் எடுத்தார். சட்டவிரோத செயல்கள் நடப்பதையும் தீவிரமாக கண்காணித்தார்.இதனால் கடுப்பான கைதிகள், 'சிறையில் உணவு சரியில்லை' என்று கூறி, நான்கு நாட்களுக்கு முன்பு அனிதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். ஆனால், அனிதா எதையும் கண்டுகொள்ளவில்லை.இந்நிலையில் கலபுரகி டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர்கள், 'சிறை கண்காணிப்பாளர் அனிதாவின் காரை வெடிகுண்டு வைத்து தகர்ப்போம். அவரை கொலை செய்வோம்' என்று மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்து விட்டனர்.அதிர்ச்சி அடைந்த போலீசார், அனிதா பயன்படுத்தும் காரை, கண்காணிப்பு கேமராக்கள் உள்ள இடத்தில் நிறுத்த வேண்டும் என்று டிரைவருக்கு அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில், அனிதாவுக்கு சிறையில் இருந்து தான் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட ஒன்பது கைதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. விசாரணை நடக்கிறது.