வாசகர்கள் கருத்துகள் ( 2 )
திராவிட மாடலுக்கு எதிர்மாடல்.
பரவாயில்லையே இப்போதாவது அரசு முழித்து கொண்டதே. இது பல வருடங்களாக நடந்து வருகிறது. எப்படி இந்த மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்?
புதுடில்லி: உயர்கல்வி சேர்க்கைக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல், முழு நேரப் பயிற்சியை மட்டும் மேற்கொண்டு, நேரடியாக பள்ளி, பொதுத்தேர்வு எழுதும் காரணம், இது போன்ற செயல்களை ஊக்குவிக்கும், 'டம்மி பள்ளி'களின் செயல்பாடுகள், நுழைவுத் தேர்வுகளின் செயல்திறன் மற்றும் நுழைவுத் தேர்வுகள் நடத்துவதற்கான நியாயத்தன்மை உள்ளிட்ட விவகாரம் குறித்து ஆராய ஒன்பது பேர் அடங்கிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த தேர்வு நடத்தப்படுகிறது. மருத்துவ படிப்புக்கு நீட், மத்திய பல்கலைகளில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர, க்யூட், தேசிய சட்டப் பள்ளிகளில் சேர க்ளாட் போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. குற்றச்சாட்டு
இந்த நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற, மாணவர்கள் பெரும்பாலும் தனியார் பயிற்சி மையங்களை சார்ந்திருக்கும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பயிற்சி மையங்களில் சேரும் சில மாணவர்கள், பள்ளிகளில் சேர்க்கை மட்டும் பெற்றுவிட்டு, பள்ளிக்கு செல்லாமல் முழு நேரமும் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுவதும் அதிகரிக்க துவங்கி உள்ளது. இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்கும், 'டம்மி பள்ளி'களும் கணிசமாக அதிகரித்து வருகின்றன. இந்த பயிற்சி மையங்கள், மாணவர்களிடம் லட்சக்கணக்கில் கட்டணங்களை பெற்று மாணவர்களுக்கு எதுவும் சொல்லித் தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் ஆங்காங்கே எழுந்துள்ளன. ஒரு சில பயிற்சி மையங்கள், கடுமையான பயிற்சிகளை மாணவர்களுக்கு அளிக்கின்றன. இதனால், அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுகின்றனர். இந்தச் சூழலில், நுழைவுத் தேர்வுகளின் செயல்திறன், பயிற்சி மையங்களை மாணவர்கள் சார்ந்திருக்கும் நிலை குறித்து ஆராய ஒன்பது பேர் அடங்கிய குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்துஉள்ளது. விழிப்புணர்வு
இது குறித்து மத்திய கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறியதாவது:மத்திய உயர் கல்விச் செயலர் வினீத் ஜோஷி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழு, தற்போதைய பள்ளிக் கல்வி முறைக்கும், பயிற்சி மையங்களை மாணவர்கள் சார்ந்திருக்கும் நிலைக்கும் உள்ள இடைவெளி குறித்து ஆராயும். குறிப்பாக, மாணவர்களின் சிந்தனைத் திறன், பகுத்தறிவு, பகுப்பாய்வுத் திறன், புதிய கண்டுபிடிப்பு திறன் மற்றும் மனப்பாட கற்றல் முறையின் பரவலுக்கான காரணம் என்ன? மாணவர்கள் பள்ளிக்குச் செல்லாமல், முழு நேரப் பயிற்சியை மட்டும் மேற்கொண்டு, பள்ளி பொதுத் தேர்வில் மட்டும் பங்கேற்கும் நிலைக்கான காரணம் என்ன? நுழைவுத் தேர்வுகளின் செயல்திறன் மற்றும் தற்போதைய பள்ளிக் கல்வி முறையில் நுழைவுத் தேர்வு நடத்துவதன் நியாயத்தன்மை போன்றவை குறித்து இந்த குழு ஆராயும். தனியார் பயிற்சி மையங்களின் வளர்ச்சி, தரமான உயர்கல்விக்கு அதிகரித்துவரும் தேவை, பள்ளி மற்றும் உயர்கல்வி அளவில் மாணவர்களின் கற்றலை மதிப்பிடும் முறைகளின் பங்கு மற்றும் தாக்கம்; இந்த மதிப்பீடு முறை இல்லாதது, போட்டித் தேர்வுக்கான மாணவரின் தயார்நிலையை எவ்வாறு பாதிக்கிறது? பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே உள்ள விழிப்புணர்வு நிலை குறித்தும் இந்த குழு ஆய்வு செய்யும். பள்ளிகள், கல்லுாரிகளில் வழங்கப்படும் வேலைவாய்ப்பு ஆலோசனை சேவைகளின் நிலை உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இக்குழு விரிவாக ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில், பயிற்சி மையங்களை மாணவர்கள் சார்ந்திருக்கும் நிலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய கல்வி அமைச்சகம் மேற்கொள்ளும்.இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய உயர் கல்வி செயலர் வினீத் ஜோஷி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய தலைவர், மத்திய பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகளின் இணைச் செயலர்கள், சென்னை ஐ.ஐ.டி., திருச்சி என்.ஐ.டி., கான்பூர் ஐ.ஐ.டி., மற்றும் என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பிரதிநிதிகள், கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் இருந்து தலா ஒரு முதல்வர்கள் மற்றும் ஒரு தனியார் பள்ளி முதல்வர் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம்பெறுவர்.
திராவிட மாடலுக்கு எதிர்மாடல்.
பரவாயில்லையே இப்போதாவது அரசு முழித்து கொண்டதே. இது பல வருடங்களாக நடந்து வருகிறது. எப்படி இந்த மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்?