உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்டுமான இடங்களை கண்காணிக்க 99 குழுக்கள் அமைப்பு: முதல்வர் ஆதிஷி

கட்டுமான இடங்களை கண்காணிக்க 99 குழுக்கள் அமைப்பு: முதல்வர் ஆதிஷி

புதுடில்லி:“தனியார் மற்றும் அரசு கட்டுமானப் பணி நடக்கும் இடங்களில் தூசி தணிப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்படும்,”என, முதல்வர் ஆதிஷி சிங் கூறினார்.தலைநகர் டில்லியில் சமீப நாட்களாக காற்றில் மாசு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, முதல்வர் ஆதிஷி தலைமையில் நேற்று, ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கோபால் ராய், டில்லி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு, பொதுப்பணித் துறை, டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் வருவாய்த் துறை உட்பட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.கூட்டத்துக்குப் பின், நிருபர்களிடம் ஆதிஷி கூறியதாவது:காற்று மாசு அதிகரிப்பை தடுக்க பல கட்டுப்பாடுகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. டில்லி மாசுக் கட்டுப்பாட்டு குழு, வருவாய் மற்றும் தொழில் துறைகளில் இருந்து தலா 33 குழுக்கள் என 99 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்தக் குழுக்கள் தனியார் மற்றும் அரசு கட்டுமான தளங்களை ஆய்வு செய்து, தூசி தணிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யும்.இந்த குழுவினர் மாநகரம் முழுதும் ஆய்வு செய்து 'கிரீன் வார் ரூமுக்கு; தினமும் அறிக்கை தாக்கல் செய்யும்.பகலில் கட்டுமான மற்றும் கட்டட இடிப்பு கழிவுகளை அகற்றுவதை கண்காணிக்க மாநகராட்சி சார்பில் 79 குழுக்களையும், இரவு நேரத்துக்கு 75 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.கூடுதலாக, 116 குழுக்கள் பயோமாஸ் எரிப்பதைத் தடுக்க 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருக்கும்.தூசி ஏற்படுவதை தவிர்க்க மாநகரம் முழுதும் பள்ளங்களை சீரமைக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.மேலும், புகையை கட்டுப்படுத்தும் துப்பாக்கிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படும். - பொதுப் பணித்துறை - 200, டில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் - 80, மாநகராட்சி - 30 மற்றும் என்.சி.ஆர்.டி.சி., -14 புகை கட்டுப்பாட்டு துப்பாக்கிகளை பயன்படுத்தி வருகின்றன.போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களை அடையாளம் கண்டு, கூடுதல் போலீசாரை நியமிக்க போக்குவரத்து போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை